Published : 14 Jun 2014 09:37 AM
Last Updated : 14 Jun 2014 09:37 AM

நதிகளை தேசியமயமாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

இந்திய விவசாயிகள் சங்க தமிழ் மாநிலத் தலைவர் த.குருசாமி சென்னையில் நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா “கீழமை நீர்ப்பாசன உரிமை” பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை காவிரியில் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தீர்ப்பளித்த பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு ஆளாகிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்பு சார்ந்த காவிரிப் பிரச்சினையை ஒரு அரசியல் கருவியாக்கும் கர்நாடக அரசு இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.

அனைத்து தொழில்நுட்ப ஆவணங்களையும் சட்டத்தின் நியதியையும் ஆராய்ந்து வழங்கியுள்ள தீர்ப்பினை தமது சட்டமன்றத்தில் விமர்சனத்துக்கு உட்படுத்தியுள்ள கேரள அரசு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே, காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றி விவாதிக்க தமிழக சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு இடையேயுள்ள நதிநீர்த் தாவாவை தீர்க்கும் வகையில் நதிகளை தேசியமயமாக்க மத்திய அரசு விசேஷ சட்டம் இயற்ற வேண்டும்.

விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வளர்ந்த நாடுகளில் விவசாயக் கடனுக்கு 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரைதான் வட்டி வசூலிக் கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் விவசாயக் கடன் வட்டி 14 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. இதைத் தடை செய்வதுடன், விவசாயக் கடன் மற்றும் நிதி ஆதாரக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு மாநில அரசுகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

இவ்வாறு குருசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x