Published : 02 May 2022 06:43 AM
Last Updated : 02 May 2022 06:43 AM

விலை வீழ்ச்சியால் தோட்டத்தில் பறிக்காமல் விட்ட வெங்காயத்தை இலவசமாக தரும் பழநி விவசாயி

பழநி: உரிய விலை கிடைக்காததால் விளைந்த வெங்காயத்தை தோட்டத்துக்கே வந்து இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று பழநியைச் சேர்ந்த விவசாயி அறிவித்துள்ளார்.

பழநி அருகே பனம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சிவராஜ். இவர் 2 ஏக்கரில் சாகுபடி செய்த வெங்காயம் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்தது. கூலி கொடுத்து அறுவடை செய்து அதை பழநியில் உள்ள மார்க்கெட்டுக்கு வாடகை வாகனத்தில் எடுத்து வந்து விற்பனை செய்தால் நஷ்டம் இன்னும் அதிகரிக்கும். எனவே, மக்களுக்கு இலவசமாக வெங்காயத்தை வழங்க முடிவு செய்து வாட்ஸ் ஆப்பில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது: வெங்காயத்துக்கான சாகுபடி, பராமரிப்புச் செலவு, பறிப்புக் கூலி, சந்தைக்கு கொண்டுவர வாகனக் கட்டணம் உள்ளிட்டவற்றை கணக்குப் பார்த்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு பறிக்காமலேயே நிலத்தில் விட்டுவிட்டால் நஷ்டத்தின் அளவு குறையும். இருந்தாலும், விளைந்த வெங்காயம் நிலத்தில் வீணாவதைப் பார்க்க மனமில்லை. எனவே, மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன். எனது நிலத்துக்கு வந்து வெங்காயத்தை தாங்களாகவே அறுவடை செய்து எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அருகிலுள்ள கிராம மக்கள் இவரது நிலத்துக்குச் சென்று வெங்காயத்தை இலவசமாக தாங்களே அறுவடை செய்து எடுத்துச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x