Published : 02 May 2022 07:20 AM
Last Updated : 02 May 2022 07:20 AM

தருவைகுளம் கடல் பயணம் | கண்ணாடி இழை படகில் சென்று கடல்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்!

தருவைகுளம் கடலில் கண்ணாடி இழை படகில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள்.

கோவில்பட்டி: மன்னார் வளைகுடா பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் கடல் அலைகள் அதிகம் இருக்காது. கடல் பெரும்பாலும் அமைதியாக இருக்கும். இப்பகுதியில் பவளப் பாறைகள், கலர் மீன்கள், கடல் பசுக்கள், கடல் குதிரைகள், அட்டைகள், சங்குகள், கோரைகள், கடற்பாசிகள் என, பலதரப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. இவற்றை மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் ‘தருவைகுளம் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம்’ ஏற்படுத்தப்பட்டது.

கடற்கரையில் வனத்துறை சார்பில் கூரைகள் வேயப்பட்டு, சுற்றுலா பயணிகள் காத்திருப்பு பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் அமர்ந்து கடல் அழகை ரசிக்கும் விதமாக ஆங்காங்கே குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலினுள் வாழும் உயிரினங்களை மக்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கண்ணாடி இழை படகு இயக்கப்படுகிறது. இந்த கடல் பயணம் கடந்த வாரம் தொடங்கி நடந்து வருகிறது.

படகுக்கு செல்வதற்கு முன் சுற்றுலா பயணிகளுக்கு உயிர் கவசம் வழங்கப்படுகிறது. ஒரு முறை 18 பேர் வரை பயணிக் கலாம். கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகள், கலர் மீன் கூட்டம் போன்றவை புது அனுபவத்தை தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தருவைகுளம் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையத்தின் தலைவர் அமலதாசன் கூறும்போது, “தருவைகுளம் கடற்பகுதி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். இதனால் தான் தமிழக அரசு படகு சுற்றுலா திட்டத்தை இங்கு செயல்படுத்தி உள்ளது. படகு சவாரி தொடங்கி ஒரு வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மக்கள் வருகை அதிகரிக்கும் போது, படகுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஸ்கூபா டைவிங் என்ற ஆழ்கடல் நீச்சல் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 3.5 மைல் தூரத்தில் உள்ள காசிவாரி தீவு வரை படகு சவாரியை நீட்டிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

சுற்றுலா வந்திருந்த சென்னையைச் சேர்ந்த நரேந்திரன் கூறும்போது, “ கடலுக்கு அடியில் பவளப்பாறைகளை நேரில் கண்டது ஆச்சரியமாக இருந்தது.

ஜெல்லி மீன், கலர் மீன்கள், கோரைகள் உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தோம். கடல் அலைகள் சில இடங்களில் அதிகமாக இருந்தது. கடலுக்குள் உள்ள மீன்கள் உள்ளிட்டவைகளை காண பிரத்யேகமான கண்ணாடிகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கடற்கரையில் சிற்றுண்டி கடை அமைக்க வேண்டும். கூடுதலாக காத்திருப்பு பகுதிகள் மேற்கூரைகளுடன் அமைத்தால் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டினரையும் தருவைக்குளம் கவரும்” என்றார்.

கடலுக்குள் உள்ள மீன்கள் உள்ளிட்டவைகளை காண பிரத்யேகமான கண்ணாடிகளை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x