Published : 10 Jun 2014 10:39 AM
Last Updated : 10 Jun 2014 10:39 AM

காவிரியில் கிளை ஆறுகளின் குறுக்கே ரூ.117 கோடி செலவில் 61 சிறு அணைகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கொள்ளிடத்தின் குறுக்கே தடுப் பணைகளைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

“திருச்சி மாவட்டம் மேல் அணைக்கட்டு தொடங்கி, நாகப் பட்டினம் மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் வரை சுமார் 110 கி.மீ. தூரத்துக்கு காவிரியிலும், கொள்ளிடத்திலும் பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னை மாநகருக்கும், 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 கோடி மக்களின் குடிநீருக்காகவும் இங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றின் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, புதுக்கோட்டை, வேதாரண்யம் போன்ற தொலைதூர நகரங்களின் குடிநீருக்காக கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் காவிரியின் கரையில் உள்ள கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரியிலும், கொள்ளிடத்திலும் நடைபெறும் சட்ட விரோதமான மணல் கொள்ளையால் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலம் உள்ள கொள்ளிடம் ஆறு மழைக்காலத்தில் வெள்ள நீர் ஓடும் வடிகாலாகவே உள்ளது. இந்த ஆறு பாசன ஆறாக இல்லை. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணை எதுவும் இல்லாததால் ஒவ்வோர் ஆண்டும் பல டி.எம்.சி. தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் நேராகக் கடலுக்குச் சென்றுவிட்டது. இந்தத் தண்ணீரை தேக்கி, பயன்படுத்தும் வசதியிருந்தால் பல ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்திருக்கும். 13 மாவட்டங்களின் மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்திருக்கும்.

ஆகவே, தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளின் நீர் வளத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தனது மனுவில் ராஜேந்திரன் கோரியிருந்தார்.

இந்த மனு மீது தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசின் நீர்வளத் துறை (பொதுப்பணித் துறை) சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“கம்பரசம்பேட்டை அருகே தடுப்பணை ஒன்று கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தடுப்பணைகள், தளமட்ட சுவர்கள், கதவணைகள் என ரூ.117 கோடி மதிப்பீட்டில் காவிரியின் துணை ஆறுகளில் 61 சிறு அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் வசதிகள் மேம்படும்.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் கிடைக்கும் வெள்ள நீரை தேக்கி பயன்படுத்துவது குறித்து ஆராய ஒரு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. கொள்ளிடம் கீழணைக்கு கிழக்கே ஒரு தடுப்பணை கட்டுவது குறித்து அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது” என்று அந்தப் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீர்வளத் துறையின் இந்தப் பதில் மனுவைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x