Published : 01 May 2022 06:14 PM
Last Updated : 01 May 2022 06:14 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மக்கள் தப்பி ஓடும் நிலை மாற திமுக ஆட்சி அமைவது அவசியம். திமுக ஒரு மிகப்பெரிய ஜனநாயக கட்சி, யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்று திமுக மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவரும் சிவாவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு பகுதிகளில் ஒருவாரமாக பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறன. லாஸ்பேட்டையில் இன்று நடந்த நிகழ்வில் மே தினத்தையொட்டி மருத்துவமுகாம், பிரியாணி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் தரப்பட்டன. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:" புதுச்சேரியை ஆளும் பாஜக கூட்டணி அரசு தேர்தலுக்கு முன்பு கடன்களை தள்ளுபடி செய்வோம், மாநில அந்தஸ்து வழங்குவோம், மூடப்பட்டுள்ள மில்களை திறந்து இயக்குவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. மேலும் ஆனால் அறிவித்ததில் ஒன்றைக்கூட செய்யவில்லை. புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவும் ஏதும் அறிவிக்கவில்லை. எத்திட்டமும் நடைபெறவில்லை.
கடந்த முறை புதுச்சேரியில் ஆட்சியில் இருந்தபோதும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாததால் அந்த ஆட்சிக்குப்பின்னர் நடைபெற்ற தேர்தலில் சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தோற்கடிக்கப்பட்டனர். தற்போது ஆட்சிக்கு வந்தோரும் புதுச்சேரி மக்களுக்கு என்ன செய்தார்கள்-வேலைவாய்ப்பு தருகிறார்களா- தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.
புதுச்சேரியில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம், நல்ல குடிநீர் கிடைக்கும் சூழலால் முன்பு தமிழகத்தில் இருந்து புதுச்சேரியில் மக்கள் குடியேறினர். தற்போது புதுச்சேரியில் இருந்து தப்பித்து ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வேண்டும். திமுக ஒரு மிகப்பெரிய ஜனநாயக கட்சி, யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். நமது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாக்கம் இருக்கக்கூடிய ஆட்சி அமைய வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். " என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...