Published : 01 May 2022 04:05 PM
Last Updated : 01 May 2022 04:05 PM
சென்னை: இந்தியாவைப் பொருத்தவரையில் இன்று நினைவுகூரப்பட வேண்டியவர் அம்பேத்கர் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''அமெரிக்க தேசத்தின் சிகாகோ வீதிகளில் நடந்த தொழிலாளர்களின் போராட்டம்தான் எட்டுமணி நேர வேலை உள்ளிட்ட பல உரிமைகளை மீட்டளித்தது. எனினும், இந்திய தொழிலாளர் வர்க்கம் இன்று நுகரும் உரிமைகள் யாவும் புரட்சியாளர் அம்பேத்கரின் கடின உழைப்பால் விளைந்தவையே ஆகும். அவரது பங்களிப்பை இந்நாளில் நினைவுகூர்ந்து அவருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டியது நமது இன்றியமையாத கடமையாகும். அவரைச் சாதிய அடையாளத்துக்குள் சுருக்கிடும் அறியாமையிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவதும் உடனடியான தேவையாகும்.
புரட்சியாளர் அம்பேத்கர் வெள்ளையராட்சிக் காலத்தில் வைஸ்ராய் கவுன்சிலில் அமைச்சராகப் பணியாற்றியபோது தொழிலாளர் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பொறுப்பேற்றிருந்தார். அக்காலத்தில் தான் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் இந்த அரும்பெரும் சாதனைகளைப் படைத்தார். அப்போது சுதந்திரா தொழிலாளர் கட்சியையும் உருவாக்கித் தேர்தலிலும் பங்கேற்று சட்டப்பேரவையில் அங்கம் வகித்து தொழிலாளர்களுக்காகப் போராடி- வாதாடி உரிமைகளை வென்றெடுக்க வழிவகுத்தார். எனவே, இந்நாளில் புரட்சியாளர் அம்பேத்கரை நன்றியுணர்வோடு நினைவுகூர்வோம். இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாவலர் புரட்சியாளர் அம்பேத்கரின் வழியில் தொழிலாளர் நலன் காக்க இந்நாளில் உறுதியேற்போம்.
இன்றைய மோடி தலைமையிலான சங்பரிவார் அரசு, தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்கும் வகையில் ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 44 தொழிலாளர் சட்டங்களையும் மாற்றி 4 சட்டங்களாக தொகுத்துள்ளது. இது எட்டுமணி நேர வேலை என்னும் உரிமையைப் பறிக்கிறது. தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்படும் உரிமையைப் பறிக்கிறது. இன்னும் பிற பாதுகாப்பு உரிமைகளையும் பறிக்கிறது. ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்துகிறது. புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு நேரெதிராக மோடி அரசு ஃபாசிசப் போக்கில் இச்சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளது. இதனை வெகுவாக மக்களைத் திரட்டி எதிர்த்திட, போரிட இந்நாளில் உறுதியேற்போம். புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்க ஃபாசிச மோடி அரசை எதிர்த்துக் களமாடுவோம்.'' இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT