Published : 01 May 2022 02:39 PM
Last Updated : 01 May 2022 02:39 PM

உயிரிழப்புகள் இன்றி திருவிழாக்கள் நடத்த நடவடிக்கை: பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் உறுதி

நாகப்பட்டினம்: கோயில் திருவிழாக்களில் உயிரிழப்புகள் நடக்காத வகையில் திருவிழாக்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீசுவர சாமி கோயிலின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தேர்த் திருவிழா நடைபெற்றது. திருச்செங்காட்டாங்குடி மேலவீதியை சேர்ந்த தீபன்ராஜ் (30) தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தார். அப்போது தீபன்ராஜின் வயிற்று பகுதியில் தேர் சக்கரம் ஏறி படுகாயம் அடைந்த அவர் அதேஇடத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த தீபன்ராஜின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், திமுக கட்சி நிதியிலிருந்து ரூ.3 லட்சமும் ஆக மொத்தம் ரூ.8 லட்சம் நிவாரணமாக அறிவித்தார். அத்தொகையை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், நேற்று முன் தினம் வழங்கினார்.

இந்நிலையில், தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்தில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விபத்து குறித்து அரசின் உத்தரவின்பேரில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் விசாரணை நடத்தி வருகிறார். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி கோயில் தேர் சக்கரத்தில் சிக்கி ஒரு இளைஞர் இறந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குமார் ஜெயந்த் நேற்று திருச்செங்காட்டான்குடி கிராமத்திற்கு வந்தார்.

உத்தராபதீசுவர சாமி கோயிலின் தெருவடைத்தான் தேரை ஆய்வு செய்த அவர், தேர் சென்ற நான்கு மாட வீதிகளிலும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காகதான் நான் நியமிக்கப்பட்டுள்ளேன். அதற்கு இடையில் நாகை மாவட்டம் திருச்செங்காட்டான்குடி தேர் திருவிழாவில் ஒரு இளைஞர் இறந்ததால் நான் இங்கு விசாரணை நடத்த வந்துள்ளேன். களிமேடு சம்பவத்திற்கும் திருச்செங்காட்டான்குடி சம்பவத்திற்கும் வேறுபாடு உள்ளது. திருச்செங்காட்டான்குடியில் நடந்த சம்பவம் மீண்டும் நடக்க கூடாது என்பதற்காக, விசாரணை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். இனி கோயில் திருவிழாக்களில் உயிரிழப்புகள் நடக்காத வகையில், திருவிழாக்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.'' இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x