Published : 01 May 2022 11:54 AM
Last Updated : 01 May 2022 11:54 AM

பாஜகவின் சுயரூபத்தை வெளிப்படுத்தி, மேவானிக்கு நீதிமன்றம் நியாயம் வழங்கியுள்ளது: கே,எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்.

சென்னை: பாஜகவின் சுயரூபத்தை வெளிப்படுத்தி, மேவானிக்கு அசாம் நீதிமன்றம் நியாயம் வழங்கியுள்ளது என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே,எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் காங்கிரஸ் ஆதரவு குஜராத் சுயேச்சை எம்எல்ஏவும் இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பாஜகவின் முகத்திரையை கிழித்துக் கொண்டிருப்பதால், குஜராத்தில் அக்கட்சியின் செல்வாக்கு குறைந்து கொண்டிருக்கிறது. ஜிக்னேஷ் மேவானியை எப்படியாவது பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த பாஜக இரண்டு வழக்குகளில் அவரை கைது செய்து முகத்தில் கரியைப் பூசிக் கொண்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அசாம் பாஜகவைச் சேர்ந்த அசாமின் தன்னாட்சி பெற்ற போடோலாந்து பிராந்தியக் கவுன்சிலின் நிர்வாகக்குழு உறுப்பினர் அளித்த புகாரின் பேரில், மேவானி மீது குஜராத் பலான்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்ததாக அளிக்கப்பட்ட அந்தப் புகாரில் மேவானி கைது செய்யப்பட்டார். எனினும், இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கூறி, அசாம் கீழமை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.

நாட்டில் நிலவும் வகுப்புவாத பிரச்சினை தொடர்பாக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு பிரதமருக்கு மேவானி ட்வீட் செய்திருந்தார். ஓர் இந்திய குடிமகனாக, மக்கள் பிரதிநிதியாக இந்த கேள்வியை எழுப்ப அவருக்கு உரிமை உண்டு. இதற்காக பிரதமர் அலுவலகத்தின் நிர்ப்பந்தத்தின் பேரில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மேவானி கூறும் குற்றச்சாட்டுகளில் நியாயம் இருக்கிறது.

இந்நிலையில், முதல் வழக்கில் ஜாமீன் பெற்றதும் அசாமின் பெண் போலீஸ் அதிகாரியைத் தரக்குறைவாகப் பேசியதாக இந்திய தண்டனைச் சட்டம் 294 ஆவது பிரிவின் கீழ் மற்றொரு வழக்கு பதியப்பட்டது. எப்படியாவது அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கிலும் மேவானிக்கு ஜாமீன் அளித்த கீழமை நீதிமன்றம், பெண் போலீஸ் அதிகாரியை என்ன வார்த்தைகளால் மேவானி திட்டினார் என்பதைக் குறிப்பிடவில்லை என்றும், இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டு ஆண் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், குற்றம்சாட்டப்படுவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என்றும் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியதோடு, மேவானியை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.

பாஜக ஆளும் அசாமில் விசாரணைக் கைதிகள் கொலை செய்யப்படுவது, அசாமில் போலீஸ் ராஜ்யத்துக்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், பொய் வழக்குகள் போட்டு எதிரிகளை முடக்கும் நடவடிக்கை மத்தியில் ஆளும் பாஜக செய்து கொண்டிருக்கிறது. அதையே மாநிலங்களை ஆளும் பாஜவினரும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மேவானி மீதான இரண்டு பொய் வழக்குகளைத் தகர்த்தெறிந்தது மூலம், பாஜகவின் சுயரூபத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது. கைது என்ற மிரட்டலால் அரசியல் எதிரிகளைப் பணிய வைத்துவிடலாம் என்ற பாஜகவின் திட்டத்தை, அசாம் கீழமை நீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது. இதன்மூலம் நீதிமன்றம் ஜிக்னேஷ் மேவானிக்கு நியாயம் வழங்கியுள்ளது. பாஜகவை எதிர்த்த ஒரே காரணத்துக்காக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு அசாம் நீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளித்திருக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பினால் சிறைவாசம் என்ற பாஜகவின் சர்வாதிகாரப் போக்குக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்த வெற்றி.'' இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x