Published : 12 Jun 2014 09:30 PM
Last Updated : 12 Jun 2014 09:30 PM

ஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் சாதனை

ஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் தேசிய அளவில் சாதனை படைத்தார்.

மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (யூபிஎஸ்சி) 2013-ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்காக தேர்வு எழுதியவர்களில் 1,122 பேர் தேர்வாகியுள்ளனர். இதில், தமிழகத்தில் தமிழக மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த 109 பேரில், பினோ ஜெபின் என்ற பார்வையற்ற மாணவியும், முகமது அஸ்ரப் என்ற மாற்றுத் திறனாளி மாணவரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இம்மையத்தைச் சேர்ந்த 46 பேர் இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேசிய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி பினோ ஜெபின் தற்போது ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

பிறவியிலேயே பார்வையற்ற இவர், 2-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். பாடங்களை பிரெய்ல் முறையில் படித்து தேர்வு எழுதியது கவனிக்கத்தக்கது.

தேர்வு முடிவுகள் - முக்கிய அம்சங்கள்

* தேச அளவில் தேர்வு எழுதியவர்களில் 1122 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் ஆண்கள் 861 பேர்; பெண்கள் 261 பேர். மாற்றுத் திறனாளிகள் 30 பேர்.

* கான்பூர் ஐ.ஐ.டி, லக்னோ ஐ.ஐ.எம்.மில் பயின்ற கெளரவ் அகர்வால், தேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இது இவரது இரண்டாவது முயற்சி.

* டாப் 25-ல் 15 ஆண்களும், 10 பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

* டாப் 25-ல் 24 பேர் ஆங்கில மொழியிலும், ஒருவர் கன்னட மொழியிலும் தேர்வு எழுதியவர்கள்.

* பிஹார், டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 11 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் டாப் 25-ல் இடம்பெற்றுள்ளனர்.

* இந்திய அளவில் 45-வது ரேங்க் பெற்ற வி.பி.ஜெயசீலன் என்ற மாணவர், தமிழகத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் வழியில் தேர்வெழுதி இந்தச் சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்க அம்சம். தேச அளவில் 69-வது ரேங்க் பெற்ற டாக்டர் கே.பி.கார்த்திகேயன் தமிழக அளவில் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

* தேச அளவில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும், ராஜஸ்தானும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. தமிழகம் 3-ம் இடத்தை வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x