Published : 01 May 2022 07:18 AM
Last Updated : 01 May 2022 07:18 AM
எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கைது செய்யப்பட்டார்.
தேசியக் கல்வி என்ற பெயரால் மத்திய அரசு திணிக்க இருக்கும் இந்தியைஎதிர்த்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நேற்று இந்தி அழிப்புப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தொடங்கி வைத்தார். முன்னதாக, கி.வீரமணி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
இந்தி எழுத்தை அழிப்பதன் மூலம் கலாச்சார, பண்பாட்டு திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். 1938-ம் ஆண்டு பெரியார் காலத்தில் தொடங்கிய இந்தக் கலாச்சார திணிப்புக்கு எதிரான போராட்டம் இன்றுவரை தேவைப்படுகிறது. இந்த மண் காவி மண் அல்ல. பெரியார் மண். இந்த மண் கலாச்சார பண்பாட்டு திணிப்பை ஒருபோதும் ஏற்காது என்பதற்கு அடையாளமாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்,மக்கள் தங்கள் மொழி, கலாச்சாரம், பண்பாடு, உரிமையைக் காப்பாற்றுவது அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ளது.
போராட்டம் தொடரும்
ஆனால் தற்போது, இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற அளவுக்கு ஆணவம் வளர்ந்துவிட்டது. பெரியார் தொடங்கிய போராட்டம் ஒருபோதும் தோற்றது இல்லை. கல்வித் துறை, ஆட்சித் துறையில் இந்தியைத் திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக இந்தப்போராட்டம் நடத்தப்படுகிறது.இது ஒரு தொடர் போராட்டம். வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
முன்னதாக, கி.வீரமணி தலைமையில் திராவிட கழகத்தினர், பெரியார் திடலில் இருந்து புறப்பட்டு, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக எழும்பூர் ரயில் நிலையம் வந்தனர். அங்கு தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் சென்று இந்தியை அழிக்க முயன்றனர்.
அப்போது, போலீஸார் வீரமணி உள்ளிட்டோரைக் கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...