Published : 01 May 2022 06:06 AM
Last Updated : 01 May 2022 06:06 AM

விசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்

சென்னை

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆர்வலர்கள் சுதாராமலிங்கம், பி.எஸ்.அஜிதா, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும்.

விக்னேஷ் இறுதிச் சடங்குக்காக போலீஸார் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் எதற்காக பணம் தரவேண்டும்? அரசும் ஏன் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அந்த ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி யார் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து, இனியும் காவல் நிலைய மரணங்கள் நடக்காமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விக்னேஷின் சகோதரர்களுக்கு ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x