Published : 01 May 2022 06:05 AM
Last Updated : 01 May 2022 06:05 AM
திமுக மாணவரணி சார்பில், கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் தொடர்பான தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. மாணவரணிச் செயலர் சி.வி.எம்.பி.எழிலரசன் வரவேற்றார். திக தலைவர் கி.வீரமணி மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.
இதில், அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது: இந்தியாவில் பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் உள்ளன.இவற்றைக் கருத்தில் கொள்ளாது, ஒற்றை ஆட்சி நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது.
கூட்டாட்சித் தத்துவம் நிலவும்அமெரிக்காவில் ஆளுநரைக்கூடமக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மத்தியஅரசால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். அதன் காரணமாகவே, மாநிலஉரிமைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசின் முகவராகச் செயல்படுகிறார் ஆளுநர். இப்போது மட்டுமல்ல, முன்பே இப்படித்தான் இருந்துள்ளது. அதனால்தான் ஆளுநர் பதவியே வேண்டாம் என்று அறிஞர் அண்ணா வலியுறுத்தினார்.
1965-ல் இந்தியை விருப்பப் பாடமாகக் கொடுக்காமல், கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று திணிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடி திமுக வென்றுள்ளது. அதன் பின்னர், 1967-ல்ஆட்சியைப் பிடித்த திமுக, தமிழகத்துக்கு பன்னாட்டு மொழியான ஆங்கிலமும், தமிழ் மொழியும் போதும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும் என அறிவித்தது.
மறுபடியும் இந்தியை கட்டாயப் பாடமாக திணிக்க மத்திய அரசுமுயற்சிக்கிறது. அதுதான் புதியகல்விக் கொள்கை. இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், தொடக்கத்திலேயே புதிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என கூறிவிட்டார்.
மாணவர்கள் இதுபோன்ற வரலாறுகளை தெரிந்துகொள்ள வேண்டும். மாணவப் பருவத்திலேயே பகுத்தறிவுச் சிந்தனைகள், தமிழ் மீது பற்றுவர வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
எனவே, இதுபோன்ற மாநாடுகளை மாவட்டந்தோறும், கல்லூரிகள்தோறும் நடத்த வேண்டும். மாணவப் பருவத்தில் மனதில் பதியும் உணர்வுகள்தான், வாழ்நாள் முழுவதும் அவர்களை வழிநடத்தும். மொழி, இனம், சமூகத்துக்கான போராட்டக் குணங்கள் மாணவப் பருவத்திலேயே ஏற்பட வேண்டும்.
நாடு முழுவதும் காவிமயமாக வேண்டும் என்றும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். படிக்கும் காலத்தில் உங்கள் கவனம் திசை திருப்பப்படலாம். அவற்றில் எல்லாம் சிக்காமல், மொழிக் கொள்கையில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு மாநிலதிட்டக் குழுத் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், பேராசிரியர் இளங்கோவன், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திராவிட சிந்தனையாளர் காந்த் ஸ்மித், கல்வியாளர்கள் அனில் சத்கோபால், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாடு இன்றும் நடைபெற உள்ளது. இன்று காலை தொடங்கும் விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment