Published : 01 May 2022 06:10 AM
Last Updated : 01 May 2022 06:10 AM

பெருங்குடியில் தீப்பற்றிய பகுதியில் புகை வெளியேற்றம் குறைந்தது: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை

சென்னை பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் தீப்பற்றிய பகுதிகளில் புகை வெளியேற்றம் குறைந்துவிட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் தோட்டக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் மையம் அமைந்துள்ள பகுதியில் கடந்த 27-ம் தேதி மாலை 3 மணி அளவில் தீப்பற்றி எரிந்தது. 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 15 ஏக்கர் அளவுக்கு இந்த தீ பரவியது. தீப்பற்றிய உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அன்று இரவே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ ஏற்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தீயணைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இயந்திரங்கள் உதவியோடு சுமார் 100 யூனிட் மணல், குப்பைகளின் மீது பரப்பப்பட்டு புகையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 15 ஏக்கர் அளவுக்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மாநகராட்சியால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக 99 சதவீதம் புகை வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குப்பைகளிலிருந்து வரும் புகை மூட்டத்தால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பெருங்குடி, தரமணி, வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் ஆகிய 4 பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட காற்றுத் தர கண்காணிப்பு அறிக்கையில் கடந்த 29-ம் தேதி மாலையே காற்று மாசு வெகுவாக குறைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

சுமார் 15 ஏக்கர் அளவுக்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மாநகராட்சியால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக 99 சதவீதம் புகை வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x