Published : 30 Apr 2022 07:00 PM
Last Updated : 30 Apr 2022 07:00 PM
மதுரை: "படிக்காததால்தான், நாங்க அரசியல்வாதி ஆகிவிட்டோம்" என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் வரவேற்பு விழாவில் வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதால் விழா அரங்கே சிரிப்பலையால் அதிர்ந்தது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவ, மாணவிகளை வரவேற்கும் விழா இன்று நடந்தது. நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவ, மாணவிகளுக்கு ‘மருத்துவர் கோட்’ அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அனீஸ் சேகர் பேசுகையில், "மதுரை மருத்துவக் கல்லூரி தமிழகத்தின் இரண்டாவது பெரிய கல்லூரி. அத்தகைய பெருமைமிகு இந்தக் கல்லூரியில் படிக்க இடம் பிடித்தது மாணவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
நான் அடிப்படையில் ஒரு மருத்துவர். அதன்பிறகுதான் ஐஏஎஸ் தேர்வாகி ஆட்சியராக உங்கள் முன் நிற்கிறேன். நான் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவராக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது எங்களுக்கு இப்படி அமைச்சர்கள் பங்கேற்ற பெரிய நிகழ்ச்சி நடக்கவில்லை. இப்படி வண்ணமயமாக யாரையும் வரவேற்கவில்லை. ஒரு வகுப்பறையில் அமர வைத்து சில பேராசிரியர்கள் மட்டும் பேசினர். எனக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கப்போகும் மாணவர்களை பார்த்து பொறாமைப்படுகிறேன்" என்றார்.
வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், "நாங்கள் எல்லாம் கல்லூரி சென்றோம், அவ்வளவுதான். படித்தோமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. படிக்காததால்தான் நாங்க அரசியல்வாதியாகிவிட்டோம். நீங்க படித்ததால்தான் டாக்டராகப் போறீங்க. முன்புபோல் இப்போது இல்லை. மருத்துவர்களுக்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. உலகத்தில் எந்த மூலையில் எப்போது என்ன வகையான புது நோய் வருமென்று யாருக்குமே தற்போது தெரியவில்லை. இதனால் டாக்டர்களைத்தான் மக்கள் கடவுள்போல நம்பியுள்ளனர். படிப்பு எவ்வளவு முக்கியம் என்பது மருத்துவர்களைப் பார்த்துதான் தெரிகிறது. டாக்டருக்கு படிச்சிட்டு அரசியல்வாதியாகிவிடலாம். கலெக்டராகிவிடலாம். அரசியல்வாதி டாக்டராக முடியுமா?.அந்த வகையில் எங்களுக்கும் கரோனா காலத்துல பல உயிர்களை காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் கிடைத்தது. உயிரை பனையம் வைத்து உழைத்தோம்.
வெளிநாடுகளில் பணிபுரிந்த நம்மநாட்டு மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மூலம் நன்கொடை வாங்கி மதுரை மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பிளான்ட் அமைத்தோம். இனி எந்த நோய் வந்தாலும் பரவாயில்லை. அதை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு வசதி மதுரை மருத்துவக் கல்லூரியில் இருக்கிறது" என்றார்.
அமைச்சரின் இந்த யதார்த்தமான பேச்சால், விழா அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘இந்தியாவில் வேறு எந்த மாவட்டத்திலும் மதுரையை போல் கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஒரு மருத்துவராக இருந்தது நமது மாவட்டத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது. புதிதாக மருத்துவம் படிக்கப்போகும் மாணவர்கள், தற்போது ஒரு மைல்கல்லை தாண்டியுள்ளனர். இது ஒரு தொடக்கம்தான், எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராக தலைசிறந்த இந்த மருத்துவக் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளவும். நாங்களெல்லாம் படிக்கும்போது இதுபோன்ற வரவேற்பு நிகழ்ச்சி இல்லை. கட்டமைப்பு வசதிகள் இல்லை. தற்போது படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்" என்றார்.
இந்த விழாவில் கல்லூரி டீன் ஏ.ரெத்தினவேலு ஆட்சியர் அனீஸ் சேகர், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, எம்எல்ஏக்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், கல்லூரி துணை முதல்வர் வி.தனலெட்சுமி, கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா மேடை ‘ஏசி’யில் வடிந்த தண்ணீர்
பழமையான மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் சில சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய இருந்ததால் புதிதாக கட்டி சமீபத்தில் முதல்வர் திறந்து வைத்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் உள்ள உள் அரங்கில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த கட்டிடத்தின் விழா நடந்த உள்அரங்கம் இன்றுதான் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.
விழா தொடங்குவதற்கு முன் மேடையில் இருந்த ‘ஏசி’யில் தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவத் துறை அதிகாரிகள், ஊழியர்களை விட்டு உடனடியாக ‘ஏசி’யில் இருந்து தண்ணீரில் விழுவதை சரி செய்தனர். அதன்பிறகு அமைச்சர்கள், ஆட்சியர், சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர். ஆனாலும், அதன்பிறகும் லேசாக ‘ஏசி’யில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT