Published : 30 Apr 2022 01:26 PM
Last Updated : 30 Apr 2022 01:26 PM

மின் தடை | சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர்: சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உண்மைக்கு மாறான, பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் அரசு மாவட்ட பழைய தலைமை மருத்துமவனையில் இன்று (ஏப். 30ம் தேதி) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை ந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: "நிலக்கரி தட்டுப்பாடு தீரவில்லை. தேவை இருந்து கொண்டு உள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப். 28ம் தேதி) அதிகப்பட்ச மின் நுகர்வாக 17,380 மெகாவாட் பயன்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (ஏப். 29ம் தேதி) 17,543 மெகாவாட் என அதிகப்பட்ச நுகர்வு நடைபெற்றுள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கண்காணிப்பில் சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரம் சனிக்கிழமைக்கு பிறகு மின் விநியோகத்தில் தடையில்லை. இனி எப்போதும் மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது. 500 மெகாவாட் கூடுதலாக உள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். மின் தடையால் பஞ்சாப்பில் போராட்டம் நடந்து வருகிறது. ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகாவில் மின்வெட்டு உள்ளது. தமிழகம் மட்டுமல்ல. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. தமிழகத்தில் 119 நாளுக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

தமிழகத்தின் அதிகபட்ச மின் நுகர்வாக நேற்று (ஏப். 29ம் தேதி) 17,543 மெகாவாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின் தேவை 17,543 மெகாவாட்டாக அதிகரித்த நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் தடங்களின்றி சீராக மின் விநியோகம் செய்யப்பட்டது. அனைத்து புதிய மின் திட்டங்களும் உடனடியாக விரைவாக செயல்படுத்தப்படும். சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பதிவிட்டு மக்களிடம் பரப்பினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் பதற்றமான சூழலை உருவாக்கவேண்டாம்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அமைச்சர் ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துசெல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x