Published : 21 May 2016 03:26 PM
Last Updated : 21 May 2016 03:26 PM
இடுக்கி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளதையடுத்து, கள ஆய்வு செய்ய கட்சி மேலிடம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம் உள்ளிட்ட 7 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. இதில், குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள பீர்மேடு தொகுதியைக் கைப்பற்ற கட்சித் தலைமை தீவிரம் காட்டியது. அக்கட்சி சார்பில், இடுக்கி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.அப்துல்காதர் நிறுத்தப்பட்டார். இதே தொகுதியில், இரண்டுமுறை வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிஜுமோள், காங்கிரஸ் வேட்பாளர் சிரியாஸ் தாமஸ் உட்பட 8 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு சேகரிப்பின்போது அதிமுகவினர் பணம் விநியோகம் செய்ததாக இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் பிஜுமோள் 56,584 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சிரியா தாமஸ் 56,270 வாக்குகளும், பாஜக வேட்பாளர் குமார் 11,833 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் வென்னிதாமஸ் 489 வாக்குகளும் பெற்றனர். இதில் பிஜுமோள் வெறும் 314 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த அதிமுக வேட்பாளர் ஏ.அப்துல் காதர் 2,862 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்ததோடு, டெபாசிட்டையும் இழந்தார்.
இதேபோல் உடும்பன்சோலை தொகுதி அதிமுக வேட்பாளரும், இடுக்கி மாவட்ட அவைத் தலைவருமான சோமன் 1,651 வாக்குகளும், தேவிகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் தனலெட்சுமி 11,613 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் அதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில் தோல்வி தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள கேரள மாநில அதிமுக தேர்தல் பொறுப்பாளர் வேலு மணிக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT