Published : 29 Apr 2022 07:54 PM
Last Updated : 29 Apr 2022 07:54 PM
சென்னை: அதிகரித்து வரும் தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி கொல்லி பசை விற்பனை தடை செய்ய "சிறப்பு கவன திட்டம்" என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, 17,077 சுகாதார நிலையங்களில் கம்பி இல்லா இணைய சேவை (Wi-Fi Facility), தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுகாதார விவரக் குறிப்பினை மக்கள் நல பதிவேட்டில் (PHR) இணைக்கும் திட்டம், தொடர் தன்னார்வ குருதிக் கொடையாளர்களின் விவரங்களை பதிவு செய்ய, கணினி மயமாக்கப்பட்ட பதிவேடு மற்றும் செயலி , 4,308 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்தல், சூடான உணவு பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் விற்கும் நடைமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 136 அறிவிப்புகளில், சில முக்கிய அறிவிப்புகள்:
> "புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின்" கீழ் ரூபாய் 1018.85 கோடி மதிப்பீட்டில் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலூர், திருத்தணி, வள்ளியூர், திருப்பத்தூர், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் மற்றும் தென்காசி, குளித்தலை, திருச்செங்கோடு, அம்பாசமுத்திரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய 5 அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும்.
> தமிழகத்தில் 25 அரசு மருத்துவமனைகளில், பச்சிளங்குழந்தைகளின் செவித்திறன் கண்டறிவதற்காக, ஒலி புகா அறை மற்றும் நவீன உபகரணங்கள் ரூபாய் 5 கோடி செலவில் வழங்கப்படும்.
> சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக, நவீன உபகரணங்களுடன் புதிய நரம்பியல் பிரிவு கட்டடம் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
> இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும்-48 திட்டத்தின் கீழ் உயிர் காக்கும் அவரச சிகிச்சை உரிய நேரத்தில் வழங்கிட 7 அரசு மருத்துவமனைகளுக்கு ரூபாய் 14.70 கோடி மதிப்பீட்டில் புதிய சி.டி ஸ்கேன் (CT Scan) கருவிகள் வழங்கப்படும்.
> தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில், விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவேற்றம் செய்ய புதிய மென்பொருள் (Trauma Registry Software) ரூபாய் 2 கோடி செலவில் உருவாக்கப்படும்.
> வட்டார அளவிலான பொது சுகாதாரப் சேவைகளை வலுப்படுத்தும் விதமாக 178 வட்டாரங்களில் புதியதாக வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான (Block Level Public Health Units) புதிய கட்டடங்கள் ரூபாய் 143.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வலிமைபடுத்தப்படும்.
> 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியருக்கான குடியிருப்புகள் ரூபாய் 2 கோடி செலவில் புதியதாக தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்.
> அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணி முதல் செய்யப்படும்.
> பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், பன்னாட்டு பொது சுகாதார மாநாடு நடத்தப்படும்.
> "தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார சீரமைப்பு திட்டத்தின்" கீழ் முதன்முறையாக அனைத்து 21 மாநகராட்சிகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய, 35 சுகாதார ஆய்வக கட்டடங்கள் ரூபாய் 17.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
> "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தில் அனைவருக்கும் நலவாழ்வு எனும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக ரூபாய் 423.64 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் (Integrated Essential Laboratory Services) வழங்கப்படும்.
> 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழகம் என்னும் இலக்கை அடையும் விதமாக, 33 மாவட்டங்களில் காச நோய் தீவிர கணக்கெடுப்பின் மூலம் நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், உரிய சிகிச்சைகள் வழங்கவும் ரூபாய் 9.41 கோடி செலவிடப்படும்.
> ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக பட்டுக்கோட்டை, கம்பம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் தலா ரூபாய் 12 கோடி வீதம் ரூபாய் 36 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்.
> தமிழகத்தில் பச்சிளங்குழந்தை இறப்புகளை குறைப்பதற்கு 150 பச்சிளங்குழந்தை வென்டிலேட்டர் (Neonatal Ventilator) கருவிகள் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் 74 சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு வழங்கப்படும்.
> தமிழகத்தில் பச்சிளங்குழந்தை இறப்புகளை குறைப்பதற்கு 74 சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கும், 146 பச்சிளங்குழந்தை நிலைப்படுத்தும் பிரிவுகளுக்கும் உயிர்காக்கும் அதிநவீன உபகரணங்கள் ரூபாய் 9.37 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
> தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும்.
> தமிழகத்தில் முன்னோடித் திட்டமாக சென்னை மாவட்டத்தில் 12-14 வயதுடைய அனைத்து வளரிளம் பெண்களுக்கு ரூபாய் 7.15 கோடி செலவில் ஹெச்.பி.வி. (Human Papilloma Virus) தடுப்பூசி செலுத்தப்படும்.
> செங்கல்பட்டு, நீலகிரி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தென்காசி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் ரூபாய் 60.17 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
> புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை பருவத்தினர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திடும் விதமாக மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைப் பருவ புற்றுநோய் பராமரிப்பு பிரிவு ஏற்படுத்தி, சேவைகள் வழங்கப்படும்.
> இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு குருத்தணு பதிவேடு (Government Stem Cell Registry) சென்னை அரசு சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கி வரும் பிரத்யேக இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அலகு சிகிச்சை மையத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
> தமிழகத்தில் முதன்முறையாக 420 வட்டார அளவிலான பிறவிக் குறைபாடுகள் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் ரூபாய் 4.20 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.
> கருவுற்ற தாய்மார்களிடையே ஹீமோகுளோபினோபதீஸ் கோளாறுகளை கண்டறிந்து மரபணு ஆலோசனை வழங்கும் திட்டம் மேலும் 12 பழங்குடியினர் வசிக்கும் வட்டாரங்களில் ரூபாய் 1.68 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்.
> "திருநங்கைகள்" நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அச்சேவைகள் மேலும் மேம்படுத்திட திருநெல்வேலி, வேலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் "ஆலோசனை பிரிவு" (Gender Guidance Clinic) ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
> தமிழகத்தில் கர்ப்பக்கால உயர் இரத்த அழுத்த நோய் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் இரத்த அழுத்தத்தை கண்டறிய நவீன இரத்த அழுத்தம் கண்டறியும் கருவி (Digital Blood Pressure Apparatus) ரூபாய் 2.77 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
> தகவல் மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக 17,077 சுகாதார நிலையங்களில் கம்பி இல்லா இணைய சேவை (Wi-Fi Facility) ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
> தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுகாதார விவரக் குறிப்பினை மக்கள் நல பதிவேட்டில் (PHR) இணைக்கும் திட்டத்திற்கு ரூபாய் 3 கோடி செலவிடப்படும்.
> குருதி தேவைப்படும் நோயாளிகளுக்கு எளிதில் குருதி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, தொடர் தன்னார்வ குருதிக் கொடையாளர்களின் விவரங்களை பதிவு செய்ய, கணினி மயமாக்கப்பட்ட பதிவேடு மற்றும் செயலி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
> அதிகரித்து வரும் தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி கொல்லி பசை விற்பனை தடை செய்ய "சிறப்பு கவன திட்டம்" செயல்படுத்த வழிவகை செய்யப்படும்.
> அனைத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புகார் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக பெற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் மருத்துவமனை வரவேற்பு பிரிவில் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்படுவர்.
> 1,021 உதவி மருத்துவர்கள், 3,287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் உள்ளிட்ட 4,308 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள்.
> சூடான உணவு பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் விற்கும் நடைமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
> உணவு பொருள்களின் பாக்கெட்டுகளில் உள்ள முகப்பு சீட்டில் (Label) உள்ள விபரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
> "இளஞ்சி மன்றம்" என்ற இளஞ்சிறார் மன்றம் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு மூலிகைகள், மூலிகை பயிர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
> திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
> தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்திய மருத்துவமுறை மருந்துகளின் தரத்தினை குறைந்த செலவில் சோதனை செய்து தரும் திட்டம் செயல்படுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT