Published : 29 Apr 2022 05:42 PM
Last Updated : 29 Apr 2022 05:42 PM

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நுழைந்தாலே காருக்கு ரூ.15, பைக்குக்கு ரூ.8 நுழைவுக் கட்டணம்

மதுரை: பயனாளிகளை டிராப் செய்ய மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்குள் நுழைந்தாலே வாகனங்களுக்கு பஸ்களை போல் காருக்கு ரூ.15, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.8 என்று நுழைவுக்கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகளை டிராப் செய்யவோ அல்லது வேறு விஷயங்களுக்கோ உள்ளே நுழைந்தால் காருக்கு ரூ.15, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.8 நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதுவரை இந்த நடைமுறை அமுலில் இல்லாமல் கிடப்பில் கிடந்த நிலையில், தற்போது இந்த கட்டணம் வசூல் உரிமை தனியாருக்கு மாநகராட்சி டெண்டர் விட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி ப ஸ்நிலையம், தென் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய ஒருங்கிணைந்த எம்ஜிஆர் பஸ் நிலையமாக திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. 200-க்கும் மேற்பட்ட மாநகர டவுன் பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. அதனால், 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் பஸ்நிலையத்திற்கு இயங்கி கொண்டே இருக்கும்.

அண்டை மாவட்டங்களில் பணிபுரிவோர், பல்வேறு பணிகளுக்காக வெளியூர் செல்வோர் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகன காப்பகம் செயல்படுகிறது. ஒரு இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு 12 மணி நேரத்திற்கு ரூ.8 வசூல் செய்யப்படுகிறது. பஸ் நிலையத்தில் நுழையும் பஸ்களுக்கு ரூ.15 கட்டணம் பெறப்படுகிறது.

இந்நிலையில், மாநகராட்சிக்கு மேலும் வருவாயை ஈட்டுவதற்காக அமுல்படுத்தப்படாத வருவாய் இனங்களை சமீபத்தில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதில், மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ்நிலையத்தில் நுழையும் பஸ் தவிர மற்ற வாகனங்களுக்கும் நுழைவுக்கட்டணம் வசூல் செய்யும் உரிமையும் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. பஸ்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் தனியாரே இந்தக் கட்டணமும் சேர்த்து வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

முன்பு உறவினர்களை டிராப் செய்வதற்கு பஸ் நிலையத்தில் தாராளமாக பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்கள், கார்களில் வந்து செல்வார்கள். ஆட்டோ, வாடகை டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களும் தாராளமாக பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை பிக்கப், டிராப் செய்து வந்தனர். எந்தக் கட்டணமும் வசூல் செய்யப்படாமல் இருந்தது. மேலும், வெளியூர் செல்லும் பலர் பஸ் நிலையம் வளாகத்திலே தங்கள் இரு சக்கர வானகங்களை பார்க்கிங் செய்து சென்றனர்.

தற்போது பஸ்நிலையம் வளாகத்தில் பஸ்களை தவிர நுழையும் மற்ற அனைத்து வகை வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. காருக்கு ரூ.15, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.8 வசூல் செய்யப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் ஒரு புறம் எதிர்ப்பு கிளம்பினாலும் மற்றொரு புறம் தேவையில்லாமல் பஸ் நிலையத்தில் ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் செல்வது முறைப்படுத்தப்படுகிறது என்கிற ரீதியில் வரவேற்பும் உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பஸ் நிலையத்தில் பஸ்ஸை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. மீறி அவர்கள் வரும்போது விபத்துகளும், பஸ் போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்படுகிறது. அதைக் கட்டுப்படுத்தவே பஸ் நிலையத்தில் நுழையும் மற்ற வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அமுல்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை இந்தியா முழுவதும் உள்ள பஸ் நிலையங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது'' என்றனர்.

பயணிகளை டிராப் செய்ய தனி இடம் ஒதுக்கப்படுமா?

முன்பு பஸ் நிலையத்தில் பயணிகளை டிராப் செய்ய வாகனங்களில் வருவோருக்கு பஸ் நிலையத்தின் முன் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், காலப்போக்கில் அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஆட்டோ ஸ்டாண்ட், டாக்ஸி ஸ்டாண்ட் வைக்க அந்த இடத்தை கொடுத்துவிட்டது. தற்போது வாகனங்களில் வருவோர், பஸ் நிலையத்தின் முன் செல்லும் பிரதான சாலையில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி விட வேண்டியுள்ளது. இந்த சாலையில் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்கள் வேகமாக வந்து செல்வதால் பயணிகளை சாலையோரம் நிறுத்தி இறக்குவது அபாயகரமானது. அதனால், வாகனங்களில் பயணிகளை டிராப் செய்ய வருவோருக்கு பஸ்நிலையத்தில் கடந்த காலத்தை போல் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x