Published : 29 Apr 2022 05:36 PM
Last Updated : 29 Apr 2022 05:36 PM

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அபராத தொகையை உயர்த்த வலியுறுத்தல்: ஆணையர் தகவல்

உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் மனுதாரர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

உதகை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அபராத தொகையை உயர்த்த வலியுறுத்தப்பட்டு வருவதாக மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ், மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார், மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழ்நாடு தகவல் ஆணையம் சென்னைக்கு மனுதாரர்கள் நேரடியாக அவர்களின் சொந்த செலவில் வர சிரமமாக உள்ள காரணத்தினாலும், அவர்களின் சிரமத்தினை தவிர்க்கும் வகையிலும் தலைமை ஆணையாளர் மற்றும் ஆணையாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று பொது தகவல் அலுவலர் மற்றும் மனுதாரர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 3 மாவட்ட மனுதாரர்களின் மனுக்கள் மீதான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 60 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தகவல் அறியும் சட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு உள்ளது. முன்பு 100 முதல் 250 மனுக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது. ஆனால், தற்போது பல்வேறு துறைகளிலிருந்து 500 முதல் 1000 வரை மனுக்கள் பெறப்படுகிறது. மனுதாரர்களிடமிருந்து வரும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள பொதுத் தகவல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை உள்ளது.

மேலும், ஒரு மாதத்திற்கு 250 முதல் 300 வழக்குகள் வீதம் ஆண்டுக்கு சுமார் 5000 மனுக்கள் பெறப்படுகின்றன. மனுதாரர்கள் தங்களது நேரடியாக பிரச்சினைகளை கூறி அதற்குரிய தீர்வினை காணக்கூடிய இடமாக இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ளது. மனுதாரர்கள் அளித்த மனுவின் மீது 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்திய குடிமகன்கள், தாங்கள் அனுப்பும் மனுவில் ரூ.10-க்கான வில்லை ஒட்டி இருந்தால் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். பெறப்பட்ட மனுக்கள் மீது சரியான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தும் சரியான பதில் அளிக்கப்படாமல் இருந்தாலும், அதிகபட்சமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரூ.25,000 விதிக்க நேரிடும்.

பொது தகவல் அலுவலர் மனுக்கள் மீது திருப்திகரமான முறையில் விளக்கம் அளிக்காத பட்சத்தில் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இச்சட்டத்தில் வழிவகை உள்ளது. இந்த அபராத தொகையை உயர்த்துவதற்காக தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். மேலும், இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வரை இந்த ஆணையம் மூலம் பெற்று தந்துள்ளோம். அனைத்து தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பணிகளை கணினி மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x