Published : 29 Apr 2022 01:59 PM
Last Updated : 29 Apr 2022 01:59 PM

திண்டிவனம் அரசுக் கல்லூரி முதல்வர் மாற்றம்: ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ச.ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: தவறுகளை திருத்த முயன்ற திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வருக்கு பரிசு இட மாற்றமா? உடனே திரும்பப் பெறுக என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "திண்டிவனம் ஆ. கோவிந்தசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்த கல்லூரி முதல்வர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அப்பட்டமான பொய்ப்புகாரின் அடிப்படையில், எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் ஒரு கல்லூரியின் முதல்வரை பணியிட மாற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது. இப்போக்கு தொடர்ந்தால் உயர்கல்வி நிறுவனங்கள் சீரழிந்து விடும்.

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை சாதிய நோக்கில் அகற்றியதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி கண்காணிப்புக் குழுவினரால் மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் முனைவர் டி.பால்கிரேஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்லூரி கல்வி இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட கருத்துருவின் அடிப்படையில் முதல்வர் பால்கிரேஸ் நாமக்கல் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்'' என்று உயர்கல்வித்துறை செயலாளர் தா. கார்த்திகேயன் பிறப்பித்துள்ள ஆணையில் கூறப்பட்டிருக்கிறது.

ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி முதல்வர் பால்கிரேஸ் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. அதிலும் குறிப்பாக அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்தை சாதிய நோக்கில் அவர் மாற்றியதாக புகார் செய்வதும், அதை அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதும் அம்பேத்கரை ஒரு சாதிக்கு சொந்தக்காரராக மாற்றி இழிவுபடுத்தும் செயலாகும். இப்படி ஒரு நிலைப்பாட்டை தமிழக அரசு மேற்கொண்டிருப்பது உண்மையாகவே வருந்தத்தக்க செயலாகும்; துரதிருஷ்டவசமான நிகழ்வு ஆகும்.

கல்லூரி முதல்வர் பால்கிரேஸ் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றவில்லை; மாறாக, 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த தவற்றை சரி செய்தார். இன்னும் கேட்டால் தமிழக அரசால் சுட்டிக்காட்டப்படுவதைப் போன்று அண்ணல் அம்பேத்கரின் உருவப்படம் கல்லூரி முதல்வரின் இருக்கைக்கு பின்னால் கல்லூரி தொடங்கப்பட்ட 1969-ஆம் ஆண்டு முதல் 2017வரையிலான 48 ஆண்டுகளில் இல்லை. இதுதான் உண்மை. கல்லூரியின் வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்தால் இந்த உண்மை புரியும்.

2017-ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த நடராஜன் என்பவர் விடுப்பில் சென்ற நிலையில், உஷா ரகோத்தமன் என்பவர் சில நாட்களுக்கு முதல்வர் பொறுப்பை கவனித்துக் கொண்டார். அப்போது அதே கல்லூரியில் பணியாற்றிய சிலரது தூண்டுதலின் பேரில் ஆ.கோவிந்தசாமியின் உருவப்படத்தை அங்கிருந்து அகற்றினார் உஷா ரகோத்தமன். அதற்கு எதிர்ப்பு எழுந்தால் சமாளிப்பதற்காக அங்கு அம்பேத்கரின் உருவப் படத்தை மாட்டினார். ஆனால், இம்மாற்றங்களைச் செய்வதற்கு உரிய நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.

2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற பால்கிரேஸ், இதை அறிந்து, ஆ.கோவிந்தசாமியின் உருவப்படத்தை அது ஏற்கனவே இருந்த இடத்திற்கே மாற்றினார். அம்பேத்கர் அவர்களின் உருவப்படமும் ஏற்கனவே அது இருந்த இடத்திற்கே மாற்றப்பட்டது. இதில் என்ன சாதிய நோக்கம் இருக்க முடியும்? 2017-ஆம் ஆண்டு வரை திண்டிவனம் ஆ. கோவிந்தசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இருக்கைக்கு பின்னால் ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படம் மட்டும் தான் இருந்தது என்பதற்கும், அம்பேத்கரின் உருவப்படம் இல்லை என்பதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன; 2017-ஆம் ஆண்டு உஷா ரகோத்தமன் என்ற பொறுப்பு முதல்வரால் கோவிந்தசாமி அவர்களின் படம் அகற்றப்பட்டு, அம்பேத்கர் உருவப்படம் உரிய அனுமதிகள் பெறாமல் சட்டவிரோதமாக வைக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரங்களும், ஆவணங்களும் உள்ளன; 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற தவறுகளைத் தான் 2022-ஆம் ஆண்டில் பால்கிரேஸ் சரி செய்திருக்கிறார். இதற்காக அவர் பாராட்டப்பட்டு இருக்க வேண்டும்; ஆனால், பணியிட மாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது மிகவும் தவறு.

ஏ.ஜி. என்று அழைக்கப்படும் ஆ.கோவிந்தசாமி அவர்கள் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. திமுகவின் முன்னோடிகளில் ஒருவர் அவர். தாம் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயசூரியன் சின்னத்தை வழங்கியவரும் அவர் தான். அறிஞர் அண்ணா உள்ளிட்ட திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் 1953-ஆம் ஆண்டு மும்முனை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற போது கட்சியை வழிநடத்திச் செல்ல அண்ணாவால் நியமிக்கப்பட்டவரும் ஏ.ஜி. தான். 1967-ஆம் ஆண்டு முதல் 1969-ஆம் ஆண்டு வரை அண்ணா தலைமையிலான அமைச்சரவையிலும், கலைஞர் தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சராக பதவி வகித்த போதிலும், அப்பழுக்கற்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர் ஏ.ஜி. என்றழைக்கப்பட்ட ஆ.கோவிந்தசாமி. 1969-ஆம் ஆண்டு அவர் மறைந்த பிறகு அவரது பெயரில் திண்டிவனத்தில், ஆ. கோவிந்தசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டது.

அப்போது அந்தக் கல்லூரியின் முதல்வர் அறையில், முதல்வர் இருக்கைக்கு பின்புறச் சுவற்றில் ஆ.கோவிந்தசாமியின் பிரமாண்ட, கம்பீரமான உருவப்படம் திறக்கப்பட்டது. அந்த உருவப்படம் 2017-ஆம் ஆண்டில் அகற்றப்பட்ட போது, அதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போதும் அதே கல்லூரியில் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கல்லூரிக் கல்வி இயக்குனரகம், அப்போது நடந்த தவறை சரி செய்த இப்போதைய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கிறது என்றால், அது யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறது என்பதை தமிழக அரசு தான் மாநில மக்களுக்கு விளக்க வேண்டும்.

கல்லூரி முதல்வர் அறையில் இருந்த ஆ.கோவிந்தசாமியின் உருவப்படத்தை அகற்றிய அப்போதைய பொறுப்பு முதல்வர் உஷா ரகோத்தமன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரது காலத்தில் தான் அவர் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்லூரியில் சங்கம் தொடங்கினார்கள். அப்போதிலிருந்து தான் அக்கல்லூரியில் கல்வி மற்றும் ஒழுங்கு சீரழிவு தொடங்கியது. அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களால் தான் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டது. அந்தப் படம் தமிழக அரசால் வைக்கப்படவில்லை. மாறாக, ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படம் அரசால் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டது.

அரசால் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்ட ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படத்தை சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படம் அகற்றப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான தமிழ்த்துறை தலைவரிடம் இப்போது கல்லூரி முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இது தான் ஆ.கோவிந்தசாமி அவர்களுக்கு செலுத்தப்படும் மரியாதையா? எனத் தெரியவில்லை.

ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படம் தொடர்பான சர்ச்சை கடந்த பிப்ரவரி மாதம் எழுந்தது. அப்போது ஒரு கும்பல் முதல்வரின் அறைக்குள் நுழைந்து ஏ.ஜி. அவர்களின் உருவப்படத்தை அகற்ற வேண்டும் என்று மிரட்டியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் கல்லூரி முதல்வரை சந்தித்து ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படத்தை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மோகன், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, ''ஆ.கோவிந்தசாமி உருவப்படமும், பாமக நிறுவர் ராமதாஸ் பெயர் எழுதப்பட்ட அறக்கட்டளை பலகையும் அங்கிருந்து அகற்றப்படாது. அமைச்சர் மஸ்தான் அவர்களின் செலவில் 16 தலைவர்களின் உருவப் படங்கள் ஒரே அளவில் தயாரிக்கப்பட்டு முதல்வர் அறையில் திறக்கப்படும். ஆ.கோவிந்தசாமியின் உருவச் சிலையும் பார்வைக்கு வைக்கப்படும். அதனால் பாட்டாளி மக்கள் கட்சி எந்த வித போராட்டமும் நடத்த வேண்டாம்'' என்று மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் கேட்டுக் கொண்டார்கள். அமைச்சர் மஸ்தானும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் ஆ.கோவிந்தசாமி கல்லூரி முதல்வரை பணியிட மாற்றம் செய்வதை ஏற்க முடியாது. உடனடியாக அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். மாறாக, கல்லூரியின் அமைதி, ஒழுங்கு, கல்விச்சூழல் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் சில பேராசிரியர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அரசுத் தரப்பில் உறுதியளித்தவாறு ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படமும், எனது பெயர் எழுதப்பட்ட அறக்கட்டளை பலகையும் அங்கிருந்து அகற்றப்படக் கூடாது; ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவச் சிலையும் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த சர்ச்சை குறித்த அனைத்து உண்மைகளையும் அறிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்; அவர்கள் தீர்வு காண்பார்கள் என்று நான் நம்புகிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x