Published : 29 Apr 2022 01:22 PM
Last Updated : 29 Apr 2022 01:22 PM

கைத்தறி துறை சார்பில் நெசவுக்கூடம், சாயச்சாலை கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் கீழ் செயல்படும் கைத்தறித் துறை சார்பில் தஞ்சாவூர், கரூர், விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 96 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நெசவுக்கூடம், காட்சியறையுடன் கூடிய கிடங்கு, பொதுவசதி மையக் கட்டடம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடங்கள் ஆகிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.29) திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாட்டின் மரபு மற்றும் பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும், பொருளாதார வளர்ச்சியிலும் கைத்தறித் தொழில் பெருமை வாய்ந்த பங்கினை வகிக்கிறது. நம்முடைய கைவினைச் சிறப்பை வெளிப்படுத்தும் நீண்ட பாரம்பரிய கலையாக நெசவுத்தொழில் விளங்கி வருகிறது. கைத்தறி, விசைத்தறி மற்றும் துணிநூல் பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், அனைத்துப் பிரிவுகளின் நலனுக்காகவும் குறிப்பாக நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ், நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் காளிகாவலசு தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 200 கைத்தறிகள் மற்றும் பிற வசதிகளுடன் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நெசவுக்கூடம் மற்றும் சென்னிமலை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காட்சியறையுடன் கூடிய புதிய கிடங்கு;

திருச்சி மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் கைத்தறி, உபகரணங்கள் மற்றும் நெசவு தொடர்பான பிற பணிகளை மேற்கொள்ளும் வகையில் 58 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருவிடைமருதூர் பொது வசதி மையக் கடடிடம் மற்றும் கரூர் மாவட்டத்தில் 74 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடம்;

விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் ராமச்சந்திராபுரம் பகுதிகளில் 1 கோடியே 43 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடங்கள்; என மொத்தம் 6 கோடியே 96 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கைத்தறித் துறை கட்டிடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித் துறை ஆணையர் த.பொ. ராஜேஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x