Published : 29 Apr 2022 12:27 PM
Last Updated : 29 Apr 2022 12:27 PM
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் இன்று சித்திரை தேர்த் திருவிழா பக்தர்களின் ரங்கா ரங்கா பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையுடன் கோலாகலமாக நடைபெற்றது.
108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் "விருப்பன் திருநாள்" என்றழைக்கப்படும் சித்திரை தேர்த் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
இதன்படி, நிகழாண்டுக்கான சித்திரை தேர்த் திருவிழா ஏப்.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை- மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு நிகழ்ச்சிகளாக நம்பெருமாள் ஏப்.24-ம் தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று (ஏப்.28) காலை வெள்ளிக் குதிரை வாகனத்திலும், நேற்று மாலை தங்கக் குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். பின்னர், நேற்றிரவு 9 மணியளவில் சித்திரைத் தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேர்த் திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதன்பிறகு, நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா- கோவிந்தா என்றும், ரங்கா- ரங்கா என்றும் பக்தி பரவசத்துடன் முழக்கம் எழுப்பியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழ சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி ஆகியவற்றில் வலம் வந்து, மீண்டும் காலை 10.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அங்கு தேரின் முன்புறம் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு மற்றும் சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.
சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் நீர்மோர், பானகம், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன. சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, நாளை (ஏப்.30) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சிக்குப் பிறகு திருவிழாவையொட்டி ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படும். பின்னர், நாளை மறுநாள் (மே 1) ஆளும் பல்லக்குடன் சித்திரை தேர்த் திருவிழா நிறைவு பெறும். சித்திரை திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சீ.செல்வராஜ், கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவி ஆணையர் கு.கந்தசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment