Published : 28 Apr 2022 08:19 PM
Last Updated : 28 Apr 2022 08:19 PM

கதரங்காடிகள் புதுப்பிப்பு முதல் பனைப் பொருட்கள் விற்பனைக் கூடம் வரை: கதர் & கிராமத் தொழில்கள் துறையின் 16 அறிவிப்புகள்

சென்னை: வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் 6 கதரங்காடிகள் ரூபாய் 54 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கிராமப் பொருட்களுக்கு கண்ணை கவரும் வகையிலான மேலுறைப் பெட்டிகள் அடைப்பான்கள், விளம்பரத் துணுக்குகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் வடிவமைத்தல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கலைநயமிக்க, மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களின் விற்பனையை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும் விற்பனைக் கண்காட்சி நடத்துதல், 10 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பனைப் பொருள் விற்பனைக் கூடங்கள் அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார். அவர் வெளியிட்ட 16 முக்கிய அறிவிப்புகள்:

கதர் மற்றும் கிராமத் தொழில்கள்

> வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தச்சு கருமார அலகில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் கதர் கிராமப் பொருட்கள் மற்றும் பனைப் பொருட்களுக்கான விற்பனை காட்சி கூடம் அமைக்கப்படும்.

> மாவட்ட வாரியாக தயாரிக்கப்படும் கிராமத் தொழில் பொருட்களை கண்டறிந்து அப்பொருட்களின் தரத்தையும், தயாரிக்கும் முறைகளையும் நிர்ணயம் செய்து அவற்றை சந்தைப்படுத்தும் பணிகள் ரூபாய் 50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

> வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் ஆறு கதரங்காடிகள் ரூபாய் 54 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.

> சிவகங்கை மாவட்டம், கண்டனூர் கதர் வளாகத்தில் ரூபாய் 5 லட்சம் செலவில் 5 கதர் தறிகள் நிறுவப்படும்.

> கிராமப் பொருட்களுக்கு கண்ணை கவரும் வகையிலான மேலுறைப் பெட்டிகள் அடைப்பான்கள், விளம்பரத் துணுக்குகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் ரூபாய் 10 லட்சம் செலவில் வடிவமைக்கப்படும்.

> ரூபாய் 25 லட்சம் செலவில் கதர் கிராமப் பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெற ஏதுவாக விளம்பர குறும்படங்களைத் தயாரித்து சமூக ஊடகங்கள், திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும்.

> சிவகங்கை மாவட்டம், கண்டனூர் குளியல் சோப்பு அலகில் ரூபாய் 3 லட்சம் செலவில் திரவ சலவை சோப்பு உற்பத்தி தொடங்கப்படும்.

> ரூபாய் 4.50 லட்சம் செலவில் பஃபிங் மற்றும் பாலிஷ் இயந்திரங்கள் கொள்முதல் செய்து சேலம், நாமக்கல் மற்றும் கண்டனூர் ஆகிய காலணி அலகுகளில் நிறுவப்படும்.

> தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் 10 மண்பாண்டத் தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு 10 மண் அரைக்கும் இயந்திரங்கள் ரூபாய் 6 லட்சம் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

> கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகிலுள்ள அம்சி தேன் பதப்படுத்தும் நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய தேன் பரிசோதனைக் கூடம் நிறுவப்படும்.

> சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கலைநயமிக்க, மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களின் விற்பனையை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும் விற்பனைக் கண்காட்சி நடத்தப்படும்.

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம்

> ரூபாய் 30 லட்சம் செலவில் 10 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பனைப் பொருள் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும்.

> தமிழ்நாடு மாநில இணையத்தின் கடலூர் கிளையில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பனை வெல்லம் இருப்பு வைக்கும் கிடங்கு நிறுவப்படும்.

> ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில இணையத்திற்கு சொந்தமான கடப்பாக்கத்திலுள்ள கட்டடம் மற்றும் பணிக்கூடம் புனரமைக்கப்படும்.

> ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில இணையத்தின் மானாமதுரை கிளையில் உள்ள பழுதடைந்த கட்டடம் புனரமைப்புச் செய்து பயிற்சிக் கூடமாக உருவாக்கப்படும்.

> ரூபாய் 20 லட்சம் செலவில் பனைப் பொருட்களின் சிறப்புகளை எடுத்துக் கூறும் விளம்பரக் குறும்படங்கள் தயாரித்து விளம்பரப்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x