Published : 28 Apr 2022 01:17 PM
Last Updated : 28 Apr 2022 01:17 PM
சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் - கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் - செட்டிநாடு ஆகிய இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், ஈரோடு மாவட்டம் - பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் - வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. தமிழகத்தில் தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பினை உயர்த்தும் இலக்கினை அடைந்திடவும், வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திடவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2021-22ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் 150 ஏக்கரில் தோட்டக்கலை கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டு, தோட்டக்கலை பயில ஆர்வமுள்ள மாணவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என்றும், மஞ்சள் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பில், அமைக்கப்படும் என்றும், கோயம்புத்தூர் - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில், ஏற்கெனவே இயங்கி வரும் வளங்குன்றா வேளாண்மைக்கான துறை மேம்படுத்தப்பட்டு, ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் - வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்தார்.
2021-22ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையில், வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்டம் - கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் - கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் - செட்டிநாடு ஆகிய மூன்று இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.
மேலும், கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இளம் அறிவியல் (மேதமை) வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் (மேதமை) தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகளில் இந்த கல்வியாண்டு முதல் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளூரில் உள்ள வேளாண்மைப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேளாண்மைப் பொறியியல் பட்டயப்படிப்பு ஆகியவை தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இக்கல்லூரிகளில் இக்கல்வியாண்டில் தலா 50 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன்மூலம், அதிகரித்து வரும் வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சிகளின் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு, மாணவர்கள் மற்றும் வேளாண் பெருமக்களின் பயன்பாட்டிற்கு மிகவும் பேருதவியாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT