Published : 28 Apr 2022 01:23 PM
Last Updated : 28 Apr 2022 01:23 PM
சென்னை: மறைமலைநகரில் ரூ.5.85 கோடி செலவில் மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் மற்றும் கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி செலவில் ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மறைமலைநகரில் 5 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகளார் சமுதாயக்கூடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில், மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த சமுதாயக்கூடம், 400 பேர் அமரும் வசதி கொண்ட நிகழ்ச்சி மண்டபம், 200 பேர் உணவருந்தும் வகையில் உணவுக்கூடம், மணமகன் மற்றும் மணமகள் அறைகள், விருந்தினர் அறைகள், சமையலறை, பொருள் இருப்பு அறை, வாகன நிறுத்துமிடம், தீயணைப்பு வசதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
மேலும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக கோயம்பேட்டில் 5,419 சதுர அடி கட்டடப் பரப்பளவில் 2 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில், 24 இருக்கைகள் கொண்ட உணவருந்துமிடம், சமையலறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் தலா 20 எண்ணிக்கைகள் கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய ஓய்வுக்கூடம், கழிவறை, குளியலறை வசதிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைவர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT