Published : 13 May 2016 03:12 PM
Last Updated : 13 May 2016 03:12 PM
சமூக ஆர்வலர், பத்திரிகை ஆசிரியர், அரசியலில் நோக்கர் என பல்வேறு கோணங்களில் இயங்கிவருபவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தவர், தற்போது ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். இது குறித்து அப்சரா தி இந்து தமிழ் இணையதளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி.
அரசியலில் எதனால் ஆர்வம் ஏற்பட்டது?
நாங்களும் குடிமக்கள்தானே. இயல்பாகவே எங்கள் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நல்ல விஷயங்களைச் செய்ய இதுவொரு வலிமையான சக்தியாக இருக்கும். மாற்றங்களைக் கொண்டு வரவும், அநீதிகளுக்கு குரல் கொடுக்கவும் அரசியல் அடையாளம் தேவையாக இருக்கிறது.
திருநங்கைகளுக்கு அரசியலில் அங்கீகாரம் கிடைக்கிறதா?
திருநங்கைகள் உட்பட அனைத்து சமூகத்தினரும் அரசியலுக்கு வரவேண்டும். ஒரு சமுதாயத்தை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச் சென்று, நல்ல மாற்றங்களை உருவாக்க அரசியல் சிறந்த பாதையாக இருக்கும். திருநங்கைகளுக்கான சுதந்திரம், பாதுகாப்பு, அங்கீகாரம் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கிடைத்திருக்கிறது. இந்த ஆட்சியில் சிறுபான்மை சமூகமாக நாங்கள் உணரவில்லை.
அதிமுகவில் சேர்ந்தது குறித்து?
அதிமுகவில் இணைந்ததை என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன். முதல்வர் கையால் அடையாள அட்டை வாங்கியது கனவு போலவே இருக்கிறது. சிறு வயதிலிருந்தே முதல்வரை எனக்குப் பிடிக்கும். அவர்களைப் பார்த்துதான் நிறையக் கற்றுக்கொண்டேன்.
பிறகு ஏன் ஆரம்பத்தில் பாஜகவில் சேர்ந்தீர்கள்?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அப்போது எனக்கு அதிமுகவில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் பெண்கள் தினத்தை முன்னிட்டு, பாஜகவினர் எனக்கு விருது அளித்தனர். கட்சியிலும் சேரச்சொன்னார்கள். அதனால் இணைந்தேன். ஆனால் அங்கே எனக்கு எந்த மரியாதையும் கிடைக்கவில்லை. சில அவமானங்களுக்கும், ஒதுக்கல்களுக்கும் உள்ளாக நேர்ந்தது. அதனால் மீண்டும் அதிமுகவில் இணைய முயற்சி செய்தேன். இந்த முறை உடனே வாய்ப்பு கிடைத்துவிட்டது. அரக்கோணத்தில் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தேன். பயந்துகொண்டேதான் போனேன். ஆனால் அவர்களிடம் ஓர் அம்மாவின் கதகதப்பை உணர முடிந்தது.
தேர்தலில் நிற்கும் திட்டம் இருக்கிறதா?
100 சதவீதம் இல்லை. எனக்கு தேர்தலில் நிற்கும் எண்ணம் இல்லை. அதில் அனுபவம் கிடையாது.
ஆர்.கே. நகரில் திருநங்கை ஒருவரும் களம் காண்கிறார். யாருக்கு உங்கள் ஆதரவு?
கண்டிப்பாய் முதல்வரையே ஆதரிப்பேன். அவர் வெற்றி பெற்றால் எல்லா சமூகத்தினருக்கும் வளம் பெறுவார்கள். ஆனால் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர் வென்றால் எங்கள் சமூகம் மட்டுமே கவனம் பெறும். அதுவுமில்லாமல் அவருக்கு போதிய அரசியல் அனுபவமும் கிடையாது. திருநங்கைகள் அனைவரும் நிச்சயம் அதிமுகவுக்கே வாக்களிப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT