Published : 27 Apr 2022 01:53 PM
Last Updated : 27 Apr 2022 01:53 PM
சென்னை: தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேர் விபத்து தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அரசுத் தரப்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துப் பேசினர்.
அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், "தஞ்சாவூர் களிமேடு அப்பர் கோயில் தேரோட்டத்தில் களிமேடு பகுதியின் கடைசிப் பகுதிக்குச் சென்று திரும்புவது வழக்கமானது. அது போலவே நேற்றும் தேர் சென்றுள்ளது. அப்போது, தேரின் பின்புறம் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரின் அதிகப்படியான எடையின் காரணமாக தேர் ஒருபக்கமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், தேரின் மேற்பகுதியானது சாலையின் ஓரத்தில் செல்லும் 33 கேவி உயர் மின்னழுத்தக் கம்பியுடன் உரசியுள்ளது. தேரானது இரும்புச் சட்டங்கள் மற்றும் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததால் இரும்புக் கம்பி உரசியதுமே தேரின் மேற்பகுதியில் தீ ஏற்பட்டது.
அதேவேளையில், தேர் உரசி 190 மில்லி செகன்ட்ஸ் அதாவது 0.19 விநாடிக்குள் ரிலே இன்டிகேசன் கம்பியில் செல்லும் 33 கேவி உயரழுத்த மின்சாரம் தானாக நின்றுவிட்டது.
விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள 33 கேவி மின் பாதையானது, 110 KV திறன் கொண்ட தஞ்சாவூர் துணை மின் நிலையத்திலிருந்து கரந்தை 33 KV துணை மின் நிலையத்திற்கு செல்லும் மின்பாதையாகும். இது தரை மட்டத்திலிருந்து 33 அடிக்கும் மேலே பாதுகாப்பான உயரத்தில் செல்கிறது. ஆனால் தேரின் பின்புறமுள்ள ஜெனரேட்டர் அணையாமல் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. மேலும் 33 கேவி மின்சாரம் தானாக நின்றபோதிலும், ஜெனரேட்டர் மூலம் தேரின் மின் விளக்குகளுக்கு மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது.
அங்கிருந்த பொதுமக்கள் குறிப்பாக அந்த சப்பரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கவும், ஜெனரேட்டரை நிறுத்தவும் சப்பரத்தின் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 33 கேவி உயரழுத்த மின்சாரம், உடனே நின்றபோதும், ஜெனரேட்டரிலிருந்து மின்சாரம் தேரின் இரும்புச் சட்டங்களில் இருந்த சீரியல் விளக்குகளுக்கு தொடர்ந்து சென்றதால், அதன்மூலம் இந்த மின்விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும்.
தேரின் மேல்பகுதியானது மடக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மடக்கும் அமைப்பானது தேர் திரும்பும் இடத்தில் மடக்கப்படவில்லை. தேரின் உச்சிப் பகுதியை மடக்கியிருந்தால் இந்த மின்விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
இந்த விபத்து தொர்பான விசாரணை நடபெற்று வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல தமிழக முதல்வர் நேரில் சென்றுள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசராணை நடத்தவும், இதுபோன்ற துயர நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்கவும், அதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அளித்திட வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT