Published : 27 Apr 2022 01:17 PM
Last Updated : 27 Apr 2022 01:17 PM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிராமப்பகுதியில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் இருந்த ஆக்கிரிமிப்புகளை, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள், ரூ.12 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் இருந்து கோவளம் பகுதிவரையில் ஈசிஆர் சாலையையொட்டி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக 1,050 ஏக்கர் நிலங்கள் பகுதிவாரியாக அமைந்துள்ளன. இந்த நிலங்கள் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் அகற்றி, நிலங்களை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன் தலைமையில், செயல் அலுவலர்கள் சக்திவேல், வெங்கடேசன், வட்டாட்சியர் ராஜன், அறநிலையத்துறை வட்டாட்சியர் பிரபாகரன், மாமல்லபுரம் டிஎஸ்பி.ஜகதீஸ்வரன் உள்பட அறநிலையத்துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
இதில், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தாஸின் தாயார் சந்திரமேனி தனக்கு சொந்தமான நிலத்தின் அருகேயுள்ள, அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து, நில அளவையர்கள் மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதேபோல், முதற்கட்டமாக அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரூ.12 கோடி மதிப்பிலான 3.11 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறையினர் மீட்டனர். மேலும், அப்பகுதியில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டது.
இதுகுறித்து, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன் கூறுகையில் ‘‘நீதிமன்ற ஆணையின் பேரில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கியுள்ளோம். இதில், முதற்கட்டமாக பட்டிபுலம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. படிப்படியாக அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT