Published : 12 May 2016 04:15 PM
Last Updated : 12 May 2016 04:15 PM
திண்டுக்கல் தொகுதியில் தொடர்ந்து மூன்றுமுறை வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிமுக, திமுக கட்சிகளுக்கு ஈடுகொடுத்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில், திண்டு க்கல் தவிர மீதமுள்ள ஆறு தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணியிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. திண்டுக்கல் தொகுதியில் தொடர்ந்து மூன்றுமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றதால், இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் தோழர்கள் களம் இறங்கி உள்ளனர். இதனால் அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
அதிமுக சார்பில் போட்டியிடும் சி. சீனிவாசன், மாவட்டச் செயலாளர், மாநிலப் பொருளாளர் என கட்சியில் பொறுப்புகளில் இருந்ததால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் அறிந்து வைத்து ள்ளார். இதனால் அனைவரும் முனைப்புடன் இறங்கி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். திண்டுக்கல் தொகுதி எம்பியாக நான்குமுறை தேர்வு செய்யப்பட்டிருப்பதால் மக்களுடன் பரிட்சயம் உள்ளது. நகர், கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு உள்ள வாக்குவங்கி கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தீவிரப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
திமுக சார்பில் போட்டியிடும் எம். பஷீர்அகமது பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகியாக உள்ளார். 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு பாலபா ரதியிடம் வெற்றிவாய்ப்பை இழந்தவர். இரண்டுமுறை திண்டுக்கல் நகராட்சித் தலைவராக இருந்தவர் என்பதால், மக்களிடம் ஏற்கெனவே அறிமுகம் உள்ளது. முஸ்லிம்கள் வாக்குகள் தொகுதியில் கணிசமாக இருப்பது மற்றும் கட்சியின் வாக்குகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என். பாண்டி நகர், கிராமப்புறங்களில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கே ற்றவர் என்பதால் மக்களுக்கு அறிமுகமானவர். மூன்றுமுறை வெற்றிபெற்ற பாலபாரதியின் செயல்பாடுகள், மக்களிடம் அவரின் அணுகுமுறை பாண்டிக்கு கைகொடுக்கும் நிலை உள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், அவர்களின் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றும், கிராமப்புறங்களில் தேமுதிக வாக்கு வங்கி இவருக்கு உதவும் என்ற நம்பிக்கையில் களப்பணியைத் தீவிரப்படுத்தி உள்ளார்.
நடுநிலையாளர்களின் வாக்குகள், ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகளை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரச்சாரப் பலம் சம அளவில் உள்ளது. வாக்குகளை கவரும் யுக்தியில், தங்களுக்கே உரிய பாணியில் அதிமுகவினர் தற்போது களம் இறங்கியுள்ளனர். திமுகவினரும் கடைசி நேரத்தில் அதிமுகவினரின் யுக்தியை பின்பற்றலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரோ, தங்களை நம்பி மக்கள் வாக்களிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT