Published : 26 Apr 2022 10:17 PM
Last Updated : 26 Apr 2022 10:17 PM

ஆண்டுக்கு ரூ.120 கோடி நஷ்டம்: அம்மா உணவகத்தில் வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

சென்னை: ஆண்டுக்கு ரூ.120 கோடி நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தின் நிர்வாக முறையில் மாற்றத்தை கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

407 உணவகம்: சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக 2013ம் ஆண்டு 207 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எண்ணிக்கை 407 ஆக உயர்த்தப்பட்டது. காலை நேரங்களில் இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம், கலவை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், இரவில் 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

1.80 லட்சம் இட்லி

அம்மா உணவகத்தில் தினசரி 1.84 லட்சம் இட்லி, 10 ஆயிரம் பொங்கல், 12 ஆயிரம் சாம்பார் சாதம், 13 ஆயிரம் கறிவேப்பிலை சாதம், 12 ஆயிரம் எலுமிச்சை சாதம், 8 ஆயிரம் தயிர் சாதம், 70 ஆயிரம் சப்பாத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தினசரி ரூ.5 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

ரூ.120 கோடி நஷ்டம்

அம்மா உணவகத்தில் தேவையான உணவு பொருட்கள் வாங்குவது, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது என்று ஒவ்வொரு ஆண்டும் அம்மா உணவகத்தை நடத்த ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவு ஏற்படுகிறது. ஆனால் ஆண்டுக்கு ரூ.20 கோடிதான் வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இதை மாநகராட்சி தான் ஏற்க வேண்டியுள்ளது.

அம்மா உணவக நிறுவனம்

நஷ்டத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்தை மேம்படுத்துவதற்கான நிதி திரட்ட நிறுவனம் ஒன்றை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து விரிவான ஆலோசனை நடத்திய நிறுவனத்தை அமைப்பதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. மேலும, உணவுகளை மாற்றுவது, விளம்பரங்கள் மூலம் வருவாய்யை உயர்த்துள்ளது உள்ளிட்டவைகளை செயல்படுத்த ஆலோனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பணிகளை வேகம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விரைவில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டு அம்மா உணவகத்தின் நிர்வாகம் முழுவதும் இந்த நிறுவனத்திடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x