Published : 03 May 2016 08:46 AM
Last Updated : 03 May 2016 08:46 AM

மக்களுக்காக ஜெயலலிதா எதுவுமே செய்யவில்லை: குஷ்பு குற்றச்சாட்டு

மக்களுக்காக எதையுமே செய்யாத ஜெயலலிதா, பிரச்சாரத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டினார்.

குடும்பத்தை கவனிப்பது, படத் தயாரிப்பு என இடைவிடாத பணிகளுக்கு இடையிலும் கன்னியாகுமரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் குஷ்பு. பிரச்சாரத்துக்கு இடையே, ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:

கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியைப் பற்றி?

அதிமுக 5 ஆண்டுகளாக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வந்தது. மக்களுக்காக ஜெய லலிதா எதுவுமே செய்யவில்லை. ஆனால், இப்போது பிரச்சாரத்தில் மேடைதோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார். ‘செய்திருக் கிறோம், செய்திருக்கிறோம்’ என்று மேடையில் பேசுபவர், எந்த வாக்குறுதியை நிறைவேற்றினார் என தெரியவில்லை. உண்மையில், அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. பணத்தைக் கொடுத்து மக்களை ஏமாற்றி ஜெயித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக் கின்றனர்.

சில மனக்கசப்புகளை காரணம் காட்டி திமுக கூட்டணியில் இருந்து பிரிந்த காங்கிரஸ், மறுபடியும் கூட்டணி வைக்க என்ன காரணம்?

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சில காரணங்களுக்காக பிரிந்து போட்டியிட்டோம். ஒரு தேர்தலில் பிரிந்து நின்றோம் என்பதற்காக பிரிந்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை.

திமுகவில் இருந்து பிரிந்து காங்கிரஸில் இணைந்த பிறகு, சமீபத்தில் கருணாநிதியை பார்க்கச் சென்றீர்களே, அப்போது என்ன சொன்னார்?

மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திந்தேன். மறுநாள் அவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக புறப்பட இருந்தார். பிரச்சாரம் தொடங்கிவிட்டால் சந்திக்க இயலாது. அதனால், எனது பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பாக அவரை சந்தித்துவிட்டு வந்தேன். வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் நிறைய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றனவே?

ஜனநாயக ரீதியாக தனித்து நின்று தங்கள் பலத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். தனித்து நிற்பதால் அவர்களது பலம் என்ன என்பது தெரிந்துவிடும்.

மக்கள் நலக் கூட்டணி பற்றி?

அதுபற்றி கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. அந்த அணியை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள வில்லை. உண்மையில் இந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும் அதிமுகவுக்கும் மட்டும்தான் போட்டி.

ஜெயலலிதா பிரச்சாரம் குறித்து உங்கள் கருத்து?

‘செய்வீர்களா... செய்வீர்களா’ என்று சொல்லி ஓட்டு கேட்கிறார் ஜெயலலிதா. அதற்கு பதிலாக ‘செய்துவிட்டோம்’ என்று சொல்லி ஓட்டு கேட்டு பார்க்கட்டுமே. அந்த தைரியம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா?

கக்கன், காமராஜர் வளர்த்த கட்சியில் குஷ்பு, நக்மா என்று சில எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கிறார்களே?

என்னோட சிரிப்புதான் அவர்களுக்கான பதில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x