Published : 26 Apr 2022 12:26 PM
Last Updated : 26 Apr 2022 12:26 PM
சென்னை: பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தி, ஒரு மனதாக நிறைவேற்றி இருப்பதை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு போட்டியாக அமைந்துள்ளது.
சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாட்டில் இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வு முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் தமிழக அரசின் முயற்சிகளை தடுத்து, அதனை நிராகரித்து விட்டு நேரடியாக செயல்படுத்தும் முயற்சியில் ஆளுநர் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.
இதே வழிமுறையில், தமிழகம் ஒரு முகமாக நின்று, எதிர்த்து வரும் "தேசிய கல்விக் கொள்கையை" உயர்கல்வித் துறையில் அமலாக்க முயற்சிப்பது மக்களாட்சி கோட்பாட்டுக்கு எதிரானதாகும். ஆளுநர் அதிகார வரம்பின் எல்லை தாண்டி, கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்ற நிலையில் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தி, ஒரு மனதாக நிறைவேற்றி இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
சட்டப் பேரவை நிறைவேற்றிய துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது" என்று முத்தரசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT