Published : 26 Apr 2022 10:53 AM
Last Updated : 26 Apr 2022 10:53 AM
டெல்லி: மலேரியா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மலேரியா ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நேற்று டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விருதை வழங்கினார். இதைத் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் பெற்றுக் கொண்டார். உடன் மாநில பொது சுகாதாரத் துறை சிறப்பு இயக்குநர் டாக்டர் வடிவேலன், இணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ் ஆகியோர் இருந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "2024ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் மலேரியா நோயை முழுமையாக ஒழித்திட மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 1990 களில் 1.20 லட்சமாக இருந்த மலேரியா நோய் பாதிப்புகள் 2011ஆம் ஆண்டில் 22,171 ஆக குறைந்து. தற்போது 772 பேருக்கு மட்டுமே மலேரியா பாதிப்பு உள்ளது. மலேரியா நோயைக் கண்டறிய அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் தேவையான ஆய்வக வசதிகள் உள்ளன. மேலும், சுகாதார ஆய்வாளர்கள் வீடுவீடாகச் சென்று கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் காய்ச்சல் கண்ட அனைத்து நபர்களிடமிருந்தும் ரத்த மாதிரிகள் சேகரித்து, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.
மலேரியா நோயைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தீவிர காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் முழுமையான அளவில் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலேரியா நோய் பாதித்த பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மலேரியாவை 2030ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் வரும் 2024ஆம் வருடத்துக்குள் மலேரியாவை ஒழிக்க இலக்குடன் அதனை அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள் மலேரியா இல்லாத நிலையை எட்டியிருப்பதைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT