Published : 26 Apr 2022 04:46 AM
Last Updated : 26 Apr 2022 04:46 AM
தாம்பரம்: தொழில் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா சிங் படேல், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையர் சண்முகசுந்தரம், இணை வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்படுகிறார். தொழில் துறை உற்பத்திக்கான கட்டமைப்பை சிறந்த அளவில் பெற்றுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆட்டோ மொபைல், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மென்பொருட்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் நாட்டுக்கே முன்னோடியாகத் தமிழகம் விளங்கி வருகிறது.
சென்னை - பெங்களூரு தொழில் வழித்தடம், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடம் ஆகியவை நிறைவடையும்போது மாநிலத்தின் பொருளாதார திறனில் மேலும் மாற்றம் ஏற்பட்டு, ஏற்றுமதிக்கான மிகப்பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT