Published : 07 May 2016 11:34 AM
Last Updated : 07 May 2016 11:34 AM

அவிநாசி - மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?

1957-ம் ஆண்டு உருவான தொகுதி அவிநாசி. 1977-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்து வருகிறது. அதிமுக 6 முறையும், இந்திய கம்யூ., திமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1972-ம் ஆண்டு, விவசாய சங்கங்கள் சார்பில் பொது வேட்பாளராக பி.ஓ.பெரியசாமி சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது, ஏ.ஏ.கருப்பசாமி (அதிமுக) உறுப்பினராக உள்ளார். கடந்த தேர்தலில், 61,411 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஆர்.நடராஜனை தோற்கடித்தவர்.

அவிநாசியில் 31, அன்னூரில் 16 என 47 ஊராட்சிகளும், அவிநாசி, திருமுருகன்பூண்டி (திருப்பூர் மாவட்டம்), அன்னூர் (கோவை மாவட்டம்) ஆகிய 3 பேரூராட்சிகளையும் கொண்டது. அவிநாசி தொகுதியில் அருந்ததியர், கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், நாயக்கர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கணிசமாகவும் உள்ளனர்.

தற்போது, அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சங்ககிரி. தொகுதியில் பிரச்சார யுக்தி மந்த நிலையிலேயே உள்ளது. தற்போதைய எம்எல்ஏ கருப்பசாமி மீதான அதிருப்தி, வெளியூர் வேட்பாளர் உள்ளிட்ட விமர்சனங்களால் வெற்றி கரை சேர்வது சந்தேகம் என்ற கருத்து உலாவுகிறது.

திமுக சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஆனந்தன் போட்டியிடுகிறார். இவர், இதே தொகுதியில் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மறைந்த இளங்கோவின் மகன். பிரச்சாரத்தில் வேகம் காட்டினாலும், வேட்பாளர் மீது நில மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பது மக்களை யோசிக்க வைத்துள்ளதை காண முடிகிறது.

கடந்த முறை (2011 தேர்தலில்) வால்பாறையில் வென்று சட்டப்பேரவை உறுப்பினரான எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், 1980-ம் ஆண்டு சிபிஐ கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

சில முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்த முறை வால்பாறை தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டும், இவர் இங்கே போட்டியிடுவது மிகுந்த பாதுகாப்பு உணர்வே என்ற விமர்சனம் கூட்டணிக்குள் உருள்கிறது.

60 ஆண்டு கால பிரதான கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியடையும்; பாசனம் பெருகும்; நிலத்தடி நீர் உயரும்; விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

விவசாயம், விசைத்தறி, பம்புசெட் உற்பத்தி பிரதானத் தொழில்கள்.

அவிநாசியை நகராட்சியாக் குதல், திருமுருகன்பூண்டியில் சிற்பக் கலைக் கல்லூரி, இயற்கை வேளாண்மைக்கு போதிய வசதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் பயிற்சிக் கல்லூரி, அவிநாசி ஊராட்சியை 2-ஆக பிரித்து, சேவூரை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்தல், சேவூரில் பேருந்து நிலையம், விசைத்தறி தொழிற்பேட்டை, குளம், குட்டைகள் தூர்வாருதல் என பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.

இது போன்ற கோரிக்கைகள், பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகள் அளித்தாலும், மக்கள் யாரை நம்புகிறார்களோ அவர்களே அவிநாசி தொகுதி உறுப்பினராக சட்டப்பேரவைக்குள் செல்வார் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x