Published : 25 Apr 2022 05:17 PM
Last Updated : 25 Apr 2022 05:17 PM
கரூர்: கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கல்குவாரியில் லாரி மீது ராட்சதப் பாறை விழுந்ததில் ஓட்டுநர் சிக்கி உயிரிழந்தார். மேலும் 2 பேர் மீட்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரதை அடுத்த காங்கேயம்பாளையத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. 100 அடிக்கும் மேல் ஆழமுள்ள கல்குவாரியில் இருந்து கல்உடைக்கும் கிரஷர் பகுதிக்கு நேற்று நள்ளிரவு லாரி ஒன்று கற்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. லாரியை பஞ்சப்பட்டி அருகேயுள்ள பாப்பயம்பாடியைச் சேர்ந்த சுப்பையா (45) ஓட்டி வந்துள்ளார்.
அப்போது ராட்சதப் பாறை திடீரென லாரி மீது விழுந்து நசுக்கியது. இதில் சுப்பையா லாரி இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டார். இந்நிலையில், டீசல் டேங்க் வெடித்து லாரி தீப்பிடித்து எரிந்து கருகியது. மேலும், அப்பகுதியில் பொக்லைனில் பணியாற்றிய கார்த்திக் (23), ராஜ்குமார் (20) ஆகிய இருவரும் மேலே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.
புகழூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை கயிற்றின்மூலம் அனுப்பினர். அதன் பின்பல மணிநேரம் போராடி அவர்களை மீட்டனர். அதன்பின் ராட்சதப் பாறையை உடைத்து லாரி ஓட்டுநர் சுப்பையாவின் உடலை 14 மணி நேர போராட்டத்திறகு பிறகு மீட்டனர்.
சுப்பையாவின் உடல் ஏற்றப்பட்ட வாகனத்தின் முன் அவரது உறவினர்கள் உரிய இழப்பீடு வழங்கக்கோரி, குவாரி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வர வலியுறுத்தியும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் க.பரமத்தி போலீஸார் சமாதான பேச்சுவார்தை நடத்திய நிலையில், அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT