Published : 25 Apr 2022 09:05 PM
Last Updated : 25 Apr 2022 09:05 PM

மதுரை மாநகர அதிமுக தேர்தலில் திடீர் திருப்பம்: செல்லூர் ராஜூவை எதிர்த்து களம் இறங்கிய 4 முக்கிய நிர்வாகிகள்

மதுரை: மதுரை மாநகர அதிமுக கட்சித் தேர்தலில் திடீர் திருப்பமாக செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து 4 முக்கிய நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளனர். இதனை அடுத்து ''மாற்றம் வராவிட்டால் கட்சியை காப்பாற்ற முடியாது'' எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகர அதிமுகவில் 15 ஆண்டிற்கு மேலாக மாநகர மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கு எதிராக போட்டியிட முன்னாள் எம்எல்ஏ-க்கள் ராஜாங்கம், எஸ்.எஸ்.சரவணன் உள்பட 4 பேர் போட்டியிட விருப்பமனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்ட அதிமுக அமைப்பு உட்கட்சித் தேர்தல் நடந்தது. மாநகரம், புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளர்கள், மற்ற மாவட்டப்பதவிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களிடம் விருப்பமனு வழங்கினர். மதுரை பனகல் சாலையில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாநகர அதிமுக நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

மாநகர் மாவட்ட செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட தங்கள் விருப்ப மனுவை அளித்ததனர். தேர்தல் பொறுப்பாளர்களாக அதிமுக மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி, சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி. கந்தன், ஜெ., பேரவை துணை செயலாளர் பெரும்பாக்கம் இ.ராஜசேகர் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டனர். செல்லூர் கே.ராஜூ, மீண்டும் மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க சென்றதால் அவர் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிட நேரடியாக மனு அளிக்கவில்லை. அவரது விருப்பமனுவை அவரது மருமகன் தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கினார். மதியம் வரை செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து யாரும், மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு கொடுக்கவில்லை. அதனாலே அவரே மீண்டும் மாநகர செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழகம் முழுவதுமே தற்போது அதிமுக உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் பதவிகள் தற்போது இருப்பவர்களே மீண்டும் தொடர வேண்டும் என்ற மறைமுக உத்தரவு கட்சி மேலிடத்தில் இருந்து வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையிலே யாரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதுபோல் மற்ற நிர்வாகிகள் பதவியில் இருப்பவர்களும் அதே நிலையில் மீண்டும் தொடர வேண்டும் என்று கூறப்பட்டதால் அந்த பதவிகளுக்கும் பெரியளவிற்கு யாரும் போட்டியிட விருப்பமனு கொடுக்கவில்லை. அதனால், கட்சி அமைப்பு ரீதியான தேர்தல் அதிமுகவில் முறையாக நடத்தப்பட்டாலும் நியமன பதவிகளை போலவே நிர்வாகிகள் ஏற்கெனவே இருக்கும் பதவிகளில் மீண்டும் அவர்களே தொடர்வதற்கு விருப்பமனு வாங்கப்பட்டது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.ராஜாங்கம், முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய ஜெ., பேரவை மாநகர செயலாளருமான எஸ்எஸ் சரவணன், முன்னாள் மண்டலத் தலைவரும், பகுதி செயலாளருமான கே.சாலை முத்து, முன்னாள் ஜெ., பேரவை செயலாளரும், பகுதி செயலாளருமான வி.கே.மாரிச்சாமி ஆகியோர் கே.கே.நகர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தேர்தல் பொறுப்பாளர்களிடம் மனு வழங்கினர். தேர்தல் பொறுப்பாளர்கள், முதலில் விருப்பமனுவை வாங்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால், நான்கு பேரும் தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து, கட்சித் தேர்தல்தானே நடக்கிறது, எங்களுக்கு போட்டியிட உரிமை இருக்கிறது அல்லவா, மனுவை வாங்குங்கள்,'' என்று முறையிட்டனர்.

இதையடுத்து, மாநகர் மாவட்டச் செலயாளர் பதவிக்கு போட்டியிட 4 பேரின் மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர். அதனால், அதிமுக கட்சித்தேர்தலில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம் கூறுகையில், ''பனகல் சாலையில் உள்ளது கட்சி அலுவலகமே கிடையாது. அது அவரது டீ கடை. அங்கு எப்படி மனு வாங்கலாம். மாநகர கட்சி அலுவலகத்தை ஈபிஎஸ், பறவையில் திறந்து வைத்துள்ளார். ஒன்று அங்கு கட்சித் தேர்தலை நடத்தவேண்டும், இல்லையென்றால் ஏதாவது திருமண மண்டபத்தில் நடத்தாலம். அவர் தனக்கு சவுகரியமான சாதகமான இடத்தில் தேர்தலை நடத்துகிறார். அவரை எதிர்த்து மட்டுமில்லை, மற்ற மாவட்டப் பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்பமனு கொடுக்க வந்தவர்களை அவரது ஆதரவாளர்கள் விரட்டிவிடுகின்றனர். கட்சிக்கு விசுவாசமானவர்களை தாண்டி அவருக்கு விசுவாசமானவர்களுக்கு பதவிகளை போட்டுக் கொடுத்து வைத்துள்ளார். உழைக்கும் உண்மையான கட்சிக்காரர்களை பதவியில்லாமல் வைத்துள்ளார். தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும்,'' என்றார்.

முன்னாள் எம்எல்ஏ சரவணன் கூறுகையில், ''செல்லூர் கே.ராஜூ தன்னை தாண்டி யாரையும் மாநகர அதிமுகவில் வளர விடமாட்டேன் என்கிறார். தற்போதே மல்லுக்கட்டிதான் விருப்பமனு வாங்க வைத்துள்ளோம். மாநகர அதிமுகவில் நாளுக்கு நாள் கட்சி தேய்ந்து கொண்டே செல்கிறது. ஏராளமான நிர்வாகிகள் திமுக, பாஜகவுக்கு சென்றுவிட்டனர். மீண்டும் வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள். கட்சியை வளர்க்க மீதமுள்ள நிர்வாகிகளை தக்க வைக்க வேண்டும். மாற்றம் வந்தால் மட்டுமே மாநகர அதிமுகவை காப்பாற்ற முடியும். இதேநிலை நீடித்தால் வருகிற எம்பி தேர்தலில் யாருமே இருக்க மாட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சமீபத்தில் வந்த அண்ணாத்துரை எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து அதிமுக நிர்வாகிகளை நாட்டாமை செய்கிறார்,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x