Published : 25 Apr 2022 01:53 PM
Last Updated : 25 Apr 2022 01:53 PM
சென்னை: ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மக்கள்மீது சுமையை ஏற்றுவதா? மாநில நிதியைப் பறிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''கடந்த இரண்டாண்டுகளாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் மக்கள் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெல்லம், அப்பளம், சாக்லெட் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட 143 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை, மத்திய அரசு பத்து சதவீதம் உயர்த்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, கரோனா நோய்த் தொற்று பரவல் நெருக்கடியால் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நிலையில், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வு திட்டம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகும். மேலும் மாநில அரசின் நிதியாதாரத்தை பாஜக மத்திய அரசு சட்டபூர்வமாக அபகரித்துக் கொள்வதால், தமிழகத்திற்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்காமல் இழுத்தடித்து, வஞ்சித்து வருகிறது. இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை மீது ஒன்றிய அரசு மௌனம் காத்து வருகிறது.
தாங்க முடியாத சுமையாக விலைவாசி உயர்வு தொடரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு, பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மக்கள் தலையில் வரிச்சுமை ஏற்றுவதை கடுமையாகக் கண்டிக்கிறோம். மத்திய அரசின் வரி உயர்வு எவ்வகையிலும் ஏற்கத் தக்கதல்ல என்பதை சுட்டிக்காட்டி, ஜிஎஸ்டி வரி உயர்வு திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT