Published : 25 Apr 2022 12:54 PM
Last Updated : 25 Apr 2022 12:54 PM
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பேசிய முதல்வர் ஸ்டாலின், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலை தூக்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார். இது குறித்து ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, “பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் ஒன்று, வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அதுபோலவே சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது, புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் இந்த நிலையே உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலை தூக்கி இருக்கிறது. குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தவர்களை நியமனம் செய்கிறது. இது மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்சினை. மாநில கல்வி உரிமை தொடர்பான பிரச்சினை. மக்களால் தேர்வு செய்யப்பட் அரசின் உரிமை. எனவே அவையில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒரு மனதாக இந்த சட்ட முன்முடிவை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மாசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் அதிமுக சார்பில் இந்த மசோதாவை ஆரம்ப நிலையில் எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT