Published : 25 Apr 2022 11:30 AM
Last Updated : 25 Apr 2022 11:30 AM
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.25) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோயில்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், ரூ.2600 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பதற்கு 38 மாவட்டங்களில் வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்களை உருவாக்கியது, தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தலைமையிடத்தில் திறக்கப்பட்டது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டு வருகின்றது.
அதன்படி, 2021-22ஆம் ஆண்டிற்கான இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையின்போது, ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூ. 15 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் இயங்கி வருகின்றன. 4 கூடுதல் ஆணையர்கள், 35 இணை ஆணையர்கள், 30 துணை ஆணையர்கள், 77 உதவி ஆணையர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஆகிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களை கொண்டு திருக்கோயில் நிர்வாகம் நிர்வகிக்கப்படுகிறது. தலைமையிட அலுவலக இடப்பற்றாக்குறையைக் களைவதற்காக ஆணையர் அலுவலக வளாகம் விரிவுப்படுத்தப்படுகிறது.
புதியதாக அமையவுள்ள கூடுதல் கட்டடம் 39,913 சதுரடியில் 4 தளங்களுடன் அமையவுள்ளது. இதில் திருக்கோயிலின் புத்தக விற்பனை நிலையம், வரவேற்பறை, உதவி ஆணையர்கள் அறை, மாவட்ட வருவாய் அலுவலர்கள் அறை, அலுவலர்கள் அறை பொறியாளர்கள் அறை, வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவகம் என நவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் அமையவுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் காலியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் தினக்கூலி / தொகுப்பூதிய அடிப்படையில் 5 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரியும் தகுதி வாய்ந்த பணியாளர்களின் பணியினை ஆய்வு செய்து பணிவரன்முறை செய்ய அரசால் ஆணையிடப்பட்டது. அதன் அடிப்படையில், நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள தகுதியான பணியாளர்களின் பணி விவரங்களைப் பரிசீலனை செய்து, தேவையான நபர்களுக்கு வயது மற்றும் கல்வித் தகுதியிலிருந்து விலக்களித்து பணிவரன்முறை செய்திடும் வகையில், முதற்கட்டமாக 425 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் அர்ச்சகர்கள், பட்டச்சாரியார்கள், பூசாரிகள் ஆகிய 12 நபர்களுக்கும், 14 இதர பணியாளர்களுக்கும், கருணை அடிப்படையில் 6 நபர்களுக்கும், நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கும், என மொத்தம் 33 நபர்களுக்கு முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கௌமாரமடாலயம் குமரகுருபரசாமிகள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா. கண்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment