Published : 25 Apr 2022 07:26 AM
Last Updated : 25 Apr 2022 07:26 AM
சென்னை: காற்றாலை சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நீங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தினசரி மின்தேவை சுமார் 14,000 மெகாவாட் மின்சாரமாகும். எனினும்,கோடைகாலத்தில் 16,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி தினசரி மின்தேவை 17,196 மெகாவாட் அளவை எட்டி சாதனை படைத்தது.
தினசரி மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தனதுசொந்த உற்பத்தி நிலையங்களில் தினமும் 3,700 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. எஞ்சிய மின்சாரத்தை மத்திய மின்தொகுப்பில் இருந்தும், தனியார்மின்நிலையங்களிலும் இருந்தும்வாங்குகிறது.
அனல் மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்து 40,000 முதல் 50,000 டன் மட்டுமே நிலக்கரி விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலக்கரி சுரங்கங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் பாரதீப் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலம் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது.
பாரதீப் துறைமுகத்தில் தமிழகத்துக்கு நிலக்கரி ஏற்ற ஒருதளம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கப்பலில் நிலக்கரியை ஏற்ற காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், சரக்கு ரயில்களில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாகவும் நிலக்கரியை கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு, முழு அளவில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை நிலவுகிறது.
ஆண்டுதோறும் கோடைகாலம் தொடங்கியதும் மின்வெட்டுப் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல, இந்த ஆண்டும் மின்வெட்டுப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.
இந்நிலையில், காற்றாலை சீசன் அடுத்த மாதம் தொடங்கஉள்ளதால், மின்தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் தினமும் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து தினமும் 5,500 மெகாவாட் மின்சாரமும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து 2,830 மெகாவாட் மின்சாரமும், மத்திய அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து 550 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், காற்றாலை சீசன் வரும் மே மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை நீடிக்க உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் தனியார் காற்றாலை நிறுவனங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தற்போது தினமும் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.10 விலைக்கு வாங்கப்படுகிறது.
காற்றாலைகளில் இருந்து முழு அளவில் மின் உற்பத்தி தொடங்கியதும், தினசரி மின் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment