Published : 26 Jun 2014 10:00 AM
Last Updated : 26 Jun 2014 10:00 AM
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, மிகவும் கடுமையான தண்டனை முறைகளைக் கொண்டு வரவேண்டும் என்று ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் ஜூன் 26-ம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடை பிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று போதைப் பொருள் ஒழிப்பு தினமாகும். இதையொட்டி, தேசிய போதைப் பொருள் ஒழிப்பு அகடமியான நேசன் சார்பில், சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கை கஸ்தூரி அண்ட் சன்ஸ் குழுமத் தலைவர் ‘இந்து’ என்.ராம் தொடங்கி வைத்தார். லயோலா பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோஸ்.சாமிநாதன், சுங்கத் துறை சென்னை மண்டல தலைமை ஆணையர் எஸ்.ரமேஷ், வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் பொது இயக்குநர் எம்.எம்.பார்த்திபன், மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சென்னை மண்டல இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா, நேசன் அமைப்பின் கூடுதல் பொது இயக்குநர் எம்.பொன்னுசாமி, டிடிகே மறுவாழ்வு மைய ஆலோசகர் ஜேக்குலின் அலன்பி டேவிட் மற்றும் லயோலா கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் என்.ராம் பேசியதாவது:
போதைப் பொருள் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி விடாமல், விழிப்புணர்வு ஏற்படுத் தும் பொறுப்பு நமக்கு உள்ளது. பல்வேறு சட்டப் புலனாய்வு மற்றும் செயலாக்க அமைப்புகள் தொடர் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொள்கின்றன.
மெக்ஸிகோ, கொலம்பியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் போதைப் பொருள் மாபியா இணைப்புக் குழுக்கள் தீவிரமாக செயல்படுகின்றன. முழு நேர குற்றச் செயல்களில் ஈடுபடு வோர், கறுப்புப் பணப் பரிமாற்றம் செய்வோர், கடத்தல் குமபல்கள், தீவிரவாத செயல்களில் ஈடுபடு வோர் ஆகியோர் போதைப் பொருள் மாபியா குழுக்களில் முழுமையாக ஈடுபடுகின்றனர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில், அதிக அளவு போதைப் பொருள்பயன்படுத்துவோர் உள்ளனர். அங்குள்ள அரசு அமைப்புகள், ஆண்டுக்கு சுமார் 60 பில்லியன் டாலர் அளவுக்கு போதைப் பொருள் ஒழிப்புக்கு செலவிடுகின்றன.இந்தியாவில் கடந்த சில மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான பல்வேறு செய்திகள் ஊடகங்கள் மூலம்
வெளிவந்துள்ளன. அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் உள்ளிட்டவை இதுகுறித்து குறிப்பிடத்தக்க அளவில் விழிப் புணர்வை உருவாக்க வேண்டும். வெறும் செய்திகள் மட்டுமின்றி, போதைப் பொருள் ஒழிப்புக்கு உதவும் வகையில் எடிட்டோரியல் கட்டுரைகளையும் வெளியிட வேண்டும். இது தொடர்பாக உறுதியான, தெளிவுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட வேண்டும்.
சமீபத்தில் நடந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு குறித்து அரசியல் கட்சிகள் ஒருவரை யொருவர் குற்றம் சாட்டினர். அந்த அளவுக்கு அங்கு போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள் ளது. இதில் புலனாய்வு அமைப் புகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட அளவுக்கு போதைப் பொருள் கடத்து வோருக்கு, கண்டிப்பாக மரண தண்டனை தரும் அளவுக்கு சட்ட நடைமுறைகள் உள்ளன. மரண தண்டனை என்பது சர்ச்சையாகலாம். நானும் மரண தண்டனையை எதிர்க்கிறேன். பல்வேறு பத்திரிகைகள் மரண தண்டனைக்கு எதிராக எழுதி வருகின்றன. ஆனாலும் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான தண்டனை முறைகளை அமல்படுத்த வேண்டும். ஏனெனில், இதில் திட்டமிட்ட குற்றக் குழுக்கள், தீவிரவாதக் குழுக்கள் ஈடுபடுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
சென்னை மருத்துவக் கல்லூரியில், 2011-ம் ஆண்டில் போதைப் பொருள் ஒழிப்புக்கெதிரான கிளப் துவங்கப்பட்டது. ஆனால், அதில் தொடர்ந்து செயல்பாடுகள் இல்லாத நிலை உள்ளது. எனவே, ‘நேசன்’ எனப்படும் தேசிய போதைப் பொருள் ஒழிப்புக்கான அகடமி மூலம், இதுபோன்ற கிளப்களை ஏற்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவர்கள் உதவியுடன் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு என்.ராம் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT