Published : 24 Apr 2022 03:32 PM
Last Updated : 24 Apr 2022 03:32 PM
சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களோடு தமிழக முதல்வர் தலைமையில் நாளை (ஏப்.25) கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் கரோனாத் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்த இருக்கிறார் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஏப்.24) நேரில் சென்று ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், கரோனா மருத்துவ பரிசோதனைகள் பற்றி கேட்டறிந்தார். அங்கு நடைபெறும் மருத்துவ முகாமினையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்விற்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "உலகம் முழுவதும் கரோனா தொற்று இன்னும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று வந்து முற்றுக்கு வந்தாலும், மீண்டும் பல்வேறு நாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி, தென் கொரியா போன்ற நாடுகளில் கரோனா தொற்று என்பது 10 ஆயிரம் முதல் 1 லட்சம் அளவுக்கு ஒரு வார காலமாக இருந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் தினந்தோறும் கரோனா தொற்றின் அளவு உயர்ந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் ஆயிரத்து 94 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது. 37,000-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தை மீண்டும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதக் காலத்தில் கரோனா இறப்பு என்பது இல்லை. நூறுக்கும் கீழ் தொற்று பாதிப்பு இருந்து வந்தது. சென்னை ஐஐடியில் ஏப்.19 முதல் நேற்று வரை கரோனா பாதிப்பு என்பது ஏப்.19 அன்று 1 ஆகவும், ஏப்.20 அன்று 2 ஆகவும், ஏப்.21 அன்று 9 ஆகவும், ஏப்.22 அன்று 21 ஆகவும், ஏப்.23 அன்று 22 ஆகவும், நேற்று 5 ஆகவும் கரோனாத் தொற்று குறைந்து இருக்கிறது.
சென்னை ஐஐடியில் மிக முக்கியமாக இந்தியாவின் 15 மாநிலங்களிலிருந்து வந்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் கல்வி பயில்வதால், மருத்துவத் துறை செயலாளர் மூன்று முறை ஐஐடி வளாகத்திற்கு வந்து கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள். இங்கு தினந்தோறும் மூன்று முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐஐடி வளாகத்தில் 7,300 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இங்கு 14 விடுதிகள் இருக்கின்றன. ஒரு விடுதியில் கரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு கண்டறிந்தால்கூட அந்த விடுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் 60 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது சதவீத அடிப்படையில் 2.98 ஆக உள்ளது. எனவே சென்னை ஐஐடி வளாகத்தில் மிகுந்த அக்கறையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த நான்கு நாட்களில் 40 பேர் கரோனா தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 20 பேருக்கு மட்டுமே தற்போது மிதமான அளவில் தொற்று இருந்துக் கொண்டிருக்கிறது. தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இங்கு வசிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் அளவிற்கு கடைப்பிடிக்கிறார்கள். எனவே தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களை படிக்க அனுப்பியுள்ள பெற்றோர்கள் இது குறித்து பதற்றம் அடைய வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே வரும் மே 8-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிகப்பெரிய அளவிற்கு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 1 கோடியே 46 லட்சம் பேருக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய 54 லட்சம் பேருக்கும் சேர்த்து 2 கோடி பேரும் இம்முகாம்களில் பயனடைய வேண்டும். 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாகவே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 8-ம் தடுப்பூசி செலுத்துவது திருவிழா போன்று தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நாளை காலை 9 மணிக்கு தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்த இருக்கிறார்" என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ், மண்டலத் தலைவர் இரா.துரைராஜ், நகர நல அலுவலர் மரு.ஜெகதீசன், ஐஐடி இயக்குநர் (பொறு.), மற்றும் ஐஐடி, பதிவாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT