Published : 03 May 2016 09:13 AM
Last Updated : 03 May 2016 09:13 AM
வடசென்னையில் பல இடங்களில் குடிநீர் வாரியம் விநியோகம் செய்யும் குடிநீர் கசப்பாக, பிளீச்சிங் பவுடரின் நெடியுடன் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், வேறு வழியின்றி ஒரு குடம் தண்ணீரை ரூ.7 கொடுத்து வாங்கி வருகின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் தேவையான அளவு குடிநீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரியமும் மாநகர் முழுவதும் போதிய அளவுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகிறது. இருப்பினும், வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் ஒரு குடம் தண்ணீர் ரூ.7-க்கு விற்கப்படுகிறது.
வடசென்னை, மகாகவி பாரதி யார் நகர், 13-வது மத்திய குறுக்குத் தெருவில் உள்ள சில வீடுகளின் தரைமட்டத் தொட்டியிலும், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியிலும் லாரி தண்ணீர் நிரப்பி, ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கு விற்கின்றனர். வியாசர்பாடி, முல்லை நகர், சத்திய மூர்த்தி நகர், வசந்தம் குடியிருப்பு, எம்ஜிஆர் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் சைக்கிள், டூவீலர், மூன்று சக்கர சைக்கிளில் வந்து லாரி தண்ணீரை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து ‘தேவை’ அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறியபோது, ‘‘ஊருக்குள் மினி லாரியில் எடுத்து வரப்படும் தண்ணீர், குடம் ஒன்றுக்கு ரூ.7-க்கும், தேவை அதிகமாக இருக்கும்போது ரூ.8 வரையிலும் விற்கப்படுகிறது’’ என்றார்.
கடந்த 8 ஆண்டுகளாக குடிநீர் விற்பனை செய்துவரும் மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த திருப்பதி ரெட்டி கூறும்போது, ‘‘நாங்கள் வழங்கும் தண்ணீர் சுவையாக இருப்பதால் குடம் ரூ.5 என பலரும் வாங்கிச் செல்கின்றனர்’’ என்றார்.
‘‘சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரில் அளவுக்கு அதிகமாக பிளீச்சிங் பவுடர் கலப்பதால் நெடி வீசுகிறது. அதை குடிக்க பிடிக்கவில்லை. குடித்தால் தொண்டை கரகரப்பாகி உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. நான் வீட்டு வேலை செய்து பிழைக் கிறேன். ஆனாலும், உடல்நலம் கெட்டுவிடக் கூடாது என்பதால் வேறு வழியின்றி ஒரு குடம் தண்ணீரை ரூ.7 கொடுத்து வாங்கு கிறேன்’’ என்கிறார் சத்தியமூர்த்தி நகர் ஹெப்சி.
‘‘சென்னை குடிநீரை காய்ச்சிக் குடித்தாலும்கூட, பெரியவர் களுக்கே உடல்நலம் பாதிக்கப்படு கிறது. குழந்தைகளின் நிலையை சொல்லவே வேண்டாம். ஏதேதோ காய்ச்சல் வருகிறது. அதனால், குடம் ஒன்றுக்கு ரூ.7 கொடுத்து வாங்குகிறோம்’’ என்கின்றனர் தங்கம் குடியிருப்பை சேர்ந்த சங்கீதா, மீனாட்சி, அலமேலு.
கோல்டன் காம்ப்ளக்ஸில் உள்ள தெரசா, சைலா கூறும்போது, ‘‘நாங்கள் நீண்டகாலமாக மெட்ரோ வாட்டரை காய்ச்சி வடிகட்டிக் குடிக் கிறோம். அதை குடித்தால்தான் தாகம் அடங்குகிறது. லாரி தண்ணீர் வாங்குவதே இல்லை’’ என்றனர்.
சென்னை குடிநீரைவிட லாரி தண்ணீர் தூய்மையாக, சுவை யாக இருப்பதால் பணம் கொடுத்தா லும் பரவாயில்லை என்பதே வட சென்னை மக்களின் கருத்தாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT