Published : 24 Apr 2022 06:20 AM
Last Updated : 24 Apr 2022 06:20 AM
துணைவேந்தர்கள் மாநாடு அழைப்பை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகை சார்பாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் வரும் 25, 26-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜகதீஸ் குமார், ஸோகோ நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் தர் வேம்பு ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
இதுதொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னை எழும்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது:
மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்க மாநில அரசு உள்ளது. ஆளுநர்தன் சொந்த விருப்பத்தை மாநில மக்கள் மீது திணிக்க முடியாது. தமிழக அரசுப் பல்கலைக் கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்களுக்கு, நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்று தனியார்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வகுப்பு நடத்தமுடியாது. இந்த மாநாட்டை ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ளது மாநில அரசின் அதிகாரத்துக்கு விடப்பட்ட நேரடி சவாலாகும். மக்களால்தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்போது அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக் கொள்ளக் கூடாது. தனக்கு உண்டான கடமையைச் செய்யாமல் தமிழக ஆளுநர் தனக்குத் தானே கூடுதல் அதிகாரங்களை வகுத்துக் கொள்கிறார். இது அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி, மக்களாட்சி மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் சூழ்ச்சியாகும்.
தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல், மாணவர்களின் நலனுக்காக எதிராக ஆளுநர் செயல்படுகிறார். எனவே, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள துணைவேந்தர்கள் மாநாடு அழைப்பை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும். அதேபோல, மாநாட்டைத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நிராகரிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்த வலியுறுத்தும் அறிவிப்புகளை யுஜிசி திரும்பப் பெற வேண்டும் என்றார்.
இந்த சந்திப்பில், பொது பள்ளிகளுக்கான மாநில மேடையின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT