Published : 23 Apr 2022 11:24 PM
Last Updated : 23 Apr 2022 11:24 PM
சென்னை: கல்வியும் தொழிலும் உற்பத்தியும் இணைந்து செயல்படுவது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“TechKnow-2022” கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, "எந்தத் துறையாக இருந்தாலும் அந்த துறை தனித்துச் செயல்பட முடியாது. ஒன்றோடு ஒன்று ஒற்றுமை கலந்திருக்கக் கூடிய உணர்வோடு அதிலே நாம் ஈடுபட்டால் தான் அதில் வெற்றி காண முடியும், அதனை நிறைவேற்ற முடியும். தனித்தனியாக தங்களது சக்தியைச் செலவிடுவதைவிட தேவையான நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அந்த செயல் விரைவாகவும் முடியும், சிறப்பாக முடிய வாய்ப்பு ஏற்படும்.
பலநேரங்களின் துறைகளுக்குள் அத்தகைய ஒருங்கிணைப்பு இருப்பது இல்லை என்பது உண்மைதான். அதை நாம் ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும். அதனை அதிகாரிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இத்தகைய நிலைமை இருக்கும் காலத்தில் கல்வியும் தொழிலும் உற்பத்தியும் இணைந்து செயல்படுவது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.
வேலை இல்லை என்று ஒரு பக்கம் இளைஞர்கள் சொல்கிறார்கள். வேலை இருக்கிறது, ஆனால் அதற்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று தொழில் நிறுவனங்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். அதற்கு இத்தகைய கருத்தரங்குகள் நிச்சயம் பயன்படப் போகிறது. எத்தகைய தகுதியை இளைஞர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லியாக வேண்டும். அத்தகைய தகுதியை இளைஞர்களுக்கு ஊட்டுவதாக பல்கலைக் கழகங்கள் மாற வேண்டும். இந்த பரஸ்பர நட்புறவு உங்களுக்குள் இருக்க வேண்டும். அதனை அரசு அதிகாரிகள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடு தான் இது போன்ற கருத்தரங்குகள்.
உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவில் 27.1 சதவீதமாக இருக்கிறது. ஆனால் தமிழகம் 51.4 சதவீதம் பெற்று சிறப்பான இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு இந்த புள்ளி விபரத்தை எடுத்தால் 54 சதவீதமாகக் கூட கூடியிருக்கலாம். உயர்கல்வியில் அனைத்து மாணவர்கள் சேர்க்கை விகிதங்களிலும் தமிழகம் முதலிடம் பெற்று முன்னிலையில் இருக்கிறது. உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் மொத்த மாணாக்கர்கள் சேர்க்கை விகிதத்தின் அதீத வளர்ச்சிக்கும், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவு மாணாக்கர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் சான்றாக உள்ளது.
இலவச பாடப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டம், ஆதிதிராவிட மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதுநிலை பட்டமேற்படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை போன்றவைகள் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியதோடு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டு இருக்கிறது. நம்முடைய சாதனைக்கு சமூகநீதிக் கொள்கையும் முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.
பல்வேறு பன்னாட்டு தொழில்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் வளாகத் தேர்வுமூலம் உயர் நிலை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக பொறியியல் மாணவர்களும் இயல்பிலேயே புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்படவேண்டும் என்ற துடிப்பும், உணர்ச்சியும் உள்ளவர்கள். மேலும், தற்போதுள்ள நவீன தொழிலகங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கொண்டு வரும் சவால்கள் ஆகியனவற்றை கண்டறியவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற பட்டதாரி மாணவர்களிடையே, தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பெறுதலுக்கான திறன்களை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் முக்கியமான புதிய திட்டம்தான் “நான் முதல்வன்” என்ற திட்டம். நீங்கள் எதை தேர்ந்தெடுத்து, அதிலே வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதிலே முதல்வனாக வரவேண்டும் என்பதற்காகத் தான் நான் முதல்வன் என்று பெயரிட்டு அந்த திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் மாணவ, இளைஞர்களின் அறிவுச் சக்தியை மேம்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம் ஆகும்.
தமிழகத்தில் உள்ள கல்வி மற்றும் தொழில்துறைகளின் வளர்ச்சி பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டு இருக்கிறது. தமிழகம், கல்வித் துறையில் மேலும் உயரிய நிலையை அடைவதற்கு பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு திறன்மிகு பயிற்சி அளித்து ஒரு சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில் துறையின் வெற்றி. மேலும், தற்போதையசூழலில் உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் பட்டதாரி மாணவர்களை உருவாக்குவது இன்றியமையாததாக அமைந்திருக்கிறது. இச்சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். TECHKNOW-2022-ன் நோக்கங்களைப் நான் படித்துப் பார்த்தேன்.உங்களது நோக்கங்கள் சிறப்பானதாக அமைந்துள்ளன.
வளர்ந்து வரும் முக்கியத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இளைஞர்களை உருவாக்க நினைக்கிறீர்கள். புதிய தொழில்முனைவோரைஅடையாளம் காண நினைக்கிறீர்கள். சுயவேலை வாய்ப்புக்கான சிறந்த யோசனை சொல்பவர்க்கு பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள். இதில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு கல்லூரியை விட்டு வெளியேறும் போது வேலையும் செல்ல வழிவகை செய்துள்ளீர்கள். மேலும் புதிய தொழில்நுட்பங்களும், புதிய தொழில்நிறுவனங்களும், ஆதரவு அளிக்கின்ற கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்காட்சியில் வைப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய கருத்தரங்குகள், போட்டிகள், திறமைவளர்க்கும் கண்காட்சிகள் மூலம் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், வருங்காலத்தில் தொழிற்திறன் வாய்ந்த மனிதவளம் மேன்மேலும் அதிகரிக்கவும், பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் என நான் நம்புகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment