Published : 23 Apr 2022 08:45 PM
Last Updated : 23 Apr 2022 08:45 PM
சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூடத்தை புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமைக் கட்டிடத்திற்கு மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள 2-வது தளத்தில் மாமன்ற கூடம் உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மாமன்றக் கூட்டங்கள் அனைத்து இந்த கூடத்தில்தான் நடைபெறும்.
சென்னை மாநகராட்சி 1688-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி அமைந்துள்ளது ரிப்பன் மாளிகை 1909-ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டது. இதன்படி 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இதன் கட்டுமானப்பணி 1913-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. 113 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ரிப்பன் மாளிகையில் 2-வது தளத்தில்தான் மாமன்ற கூடம் தற்போது வரை செயல்பட்டுவருகிறது. இந்த மாமன்ற கூடத்தில் 150 பேர் மட்டுமே அமரக் கூடிய அளவுக்குத்தான் கட்டப்பட்டது. ஆனால், தற்போது 200 பேர் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டு மன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்புகளும், பராம்பரியமும் மிக்க கட்டிடம் என்பதால் புதிய மன்றக் கூடம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில் கடந்த ஆண்டு ரிப்பன் மாளிகைக்கு பின்புறம் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 50 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் நான்கு மாடிகளுடன் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் வடிவம், உட்புற வடிவமைப்பு, வெளிப்புற வடிமைப்பு, பசுமைக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படும். இந்த மையத்தின் மேற்பகுதியில் முழுவதும் சோலார் பேனல்கள் அமைக்கப்படவுள்ளது. இந்தக் கட்டிடத்திற்கு தேவையான மின்சாரம் முழுவதும் இதன் மூலம் பெறும் வகையில் அமைக்கப்படும். குறிப்பாக, இந்தப் புதிய கட்டிடத்தின் வடிமைப்பு, ரிப்பன் மாளிகையின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், முகப்புப் பகுதியும் ரிப்பன் மாளிகை போல் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் புதிய கட்டிடத்தின் 4-வது தளத்தில் மாமன்றக் கூடத்தை இடம் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டிடம் அதி நவீன முறையிலும், அதே நேரத்தில் ரிப்பன் மாளிகை போன்றே அமைக்கப்படுவதால் மாமன்றக் கூடத்தை இந்தக் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT