Published : 23 Apr 2022 05:28 PM
Last Updated : 23 Apr 2022 05:28 PM

3 வாரங்களுக்கு முன்பு ரூ.5, இன்று ரூ.40, நாளை ரூ.50 - தக்காளி விலை அதிகரிப்பின் பின்புலம் | மதுரை நிலவரம்

மதுரை: தமிழகத்தில் கோடை வெயிலுக்கும், மழைக்கும் சாகுபடி செய்த தக்காளி அழுகிப்போவதால் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. அதனால், தக்காளி விலை கிலோ ரூ.40-க்கு விலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தக்காளி விற்பனைக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சென்னை கோயம்பேடு சந்தைகளுக்கு அடுத்ததாக மதுரை மாட்டுத்தாவணி சென்டரல் காய்கறி மார்க்கெட் முக்கிய சந்தையாக திகழ்கிறது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாது கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. தற்போது காய்கறிகள் வரத்து சீராக இருப்பதால் விலை பெரியளவிற்கு உயராமல் விற்பனை தொடர்கிறது.

ஆனால், கடந்த 3 வாரத்திற்கு முன் கிலோ ரூ.5-க்கு விற்பனை தக்காளி இன்று மதுரை சென்டரல் மார்க்கெட்டில் கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. நாளை கிலோ ரூ.50-க்கு விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

இது குறித்து எம்ஜிஆர் சென்டரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியது: "தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் கோடை மழைதான். 20 நாட்களுக்கு முன் வரை 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.100 விற்ற நிலையில் தற்போது படிபடியாக கூடி ரூ.450 வரை விலை உயர்ந்துள்ளது. கோடை வெயில் ஒரு புறம் வெயிலுக்கு, மற்றொரு புறம் கோடை மழைக்கும் சீதோஷன நிலை ஒன்று சேராமல் செடிகளிலே தக்காளி சேதமடைந்தது.

தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைந்து சந்தைகளுக்கு வரத்து இல்லாததால் கர்நாடகா, ஆந்திராவில் இருந்துதான் தற்போது தக்காளி விற்பனைக்கு வருகிறது. அதனால், தக்காளி விலை தினமும் கூடி வருகிறது. மற்ற காய்கறிகள் விலை கிலோவுக்கு 5 ரூபாய் விலை கூடவோ, குறையவோ செய்கிறது. பொதுவாக இந்த சீசனில் தக்காளி விளைச்சல் அதிகமாக தொடங்கும். விலை நடுத்தரமாக இருக்கும். தற்போது15 சதவீதம் மட்டுமே மாட்டுத்தாவணி சந்தைக்கு உள்ளூர் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

மீதி 85 சதவீதம் தக்காளி கர்நாடகா, ஆந்திராவில் இருந்துதான் வருகிறது. உள்ளூர் தக்காளி 15 சதவீதம் வந்தாலும் அவை தரமில்லாமல் பொடி தக்காளியாகதான் வருகிறது. இவை ஒரு பெட்டி ரூ.250க்கு விற்பனையாகிறது. மதுரைக்கு பெரும்பாலும் ஆந்திரா மாநிலம் வெங்கடகிரிகோட்டா, ஒத்தபல்லி, மதனப்பள்ளி, புங்கனூர், குப்பம் சந்தைகளில் இருந்துதான் தக்காளி வருகிறது.

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் தக்காளி ஒரு பெட்டிக்கு ரூ.10 கூலி, சென்று வாங்கி வருவோரின் ஒரு நாள் ஊதியம் 1,200, அவரின் தங்கும் அறை வாடகை, லாரி வாடகை ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வாடகை போவதால் தக்காளி ரூ.35 முதல் ரூ.40- வரை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்று ஒரு பெட்டி (15 கிலோ) ஆந்திராவில் ரூ.450-க்கு எடுக்கிறோம். அதனால் நாளை சந்தையில் கிலோ ரூ.50 விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல சரக்குக கடைகளில் சில்லறை விற்பனையில் இன்று கிலோ ரூ.40-க்கு விற்றார்கள். இன்னும் ஒரு மாதம் கழித்தே உள்ளூர் தக்காளி வரத்து அதகிரிக்க ஆரம்பிக்கும். ஆனால், ஆந்திராவில் இருந்து வரத்து அதிகமானாலே விலையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்" என்று சின்னமாயன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x