Published : 23 Apr 2022 04:59 PM
Last Updated : 23 Apr 2022 04:59 PM
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பப்படவுள்ளன.
ஒவ்வோர் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது தொடர்பான ஆலோசனைகளை முக்கிய கருப்பொருளாக விவாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா சபை அனைத்து துறைகளிலும் நிலையான வளர்ச்சியை 2030 ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற இலக்கினை அடிப்படையாகக் கொண்டு நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை நிர்ணயம் செய்துள்ளது. அனைத்துத் துறைகளும் ஓருங்கிணைந்த வளர்ச்சி, எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வளர்ச்சி திட்டமிடுதல், பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற மூன்றை அடிப்படையாக கொண்டு நீடித்த நிலையான வளர்ச்சி அடைவதுதான் இதன் இலக்கு என்று ஐநா சபை வரையறை செய்துள்ளது.
வறுமை ஒழிப்பு, பட்டினி இல்லாத நிலை, ஆரோக்கிய வாழ்வு, அனைவருக்கும் கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர், தூய்மையான எரிசக்தி, வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, தொழில், புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு, நிலையான நகரங்கள், நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி, காலநிலை மாற்றம், கடல் வளங்கள் பாதுகாப்பு, காடுகள் பாதுகாப்பு, அமைதி மற்றும் நீதி, அனைவருடன் நீடித்த உறவு உள்ளிட்ட 17 இலக்குகளை அடைய வேண்டும்.
வறுமை ஓழிப்பு, பட்டினி இல்லாத நிலை ஆகிய 3 இலக்குகளில் ஊரக வளர்ச்சித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இலக்குகளில் அடைவதற்கான குழுவின் தலைவராக ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் உள்ளார். இவரின் கண்காணிப்பில் இந்த இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம், 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திர ஊரக குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்ய யோஜானா போன்ற திட்டங்கள் இந்த இலக்குகளை அடைய செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழகத்தில் நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களின் கிராம் நீடித்த நிலையான வளர்ச்சி நோக்கி சென்று கொண்டு உள்ளதா அல்லது அதை செயல்படுத்துவதில் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT