Published : 23 Apr 2022 02:22 PM
Last Updated : 23 Apr 2022 02:22 PM
புதுச்சேரி: "ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்க ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சிரிப்புதான் வருகிறது” என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரி தனியார் விடுதியில் 'புதுச்சேரி வளர்ச்சியின் மீட்டுருவாக்கம் - வாய்ப்புகள், உத்திகள், தீர்வுகள்' என்ற தலைப்பில் மாநாடு இன்று நடைபெற்றது. இதனை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (24-ம் தேதி) புதுச்சேரிக்கு வருகிறார். அவரது வருகை புதுச்சேரி வளர்ச்சி பாதையின் மிக முக்கிய மைல் கல்லாக இருக்கும். அவர் பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். புதுச்சேரி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பல வளர்ச்சி திட்டங்களை நாம் ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறோம். நமக்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அமித் ஷாவின் வருகையை புதுச்சேரி வளர்ச்சி திட்டத்துக்கான வருகையாக மட்டுமே பார்க்க வேண்டும்.
உள்துறை அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லோருமே புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களை தொடங்கிது வைப்பது மட்டுமல்லாமல், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்க வருகிறார்.
தற்போது புதுச்சேரியில் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தொற்று பரவி விடக்கூடாது என்பதில் அக்கறை கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ராஜ்நிவாசில் மருத்துவ நிபுணர்களுடனான கூட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரி எந்த விதத்திலும் 4வது அலையில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த கூட்டம் நடக்கிறது. நாம் மீண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இப்போது குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கியுள்ளது. இதனால் அவர்களை ஊக்கப்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.தற்போது தடுப்பூசி பக்கம் மக்களை திருப்புவது கொஞ்சம் சிரமமான காரியமாக இருக்கிறது. கரோனா இல்லாதபோது ஏன்? தடுப்பூசி போட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். நாம் ஊசி போட்டதால்தான் கரோனா இல்லை என்ற விழிப்புணர்வு மக்களிடம் வேண்டும். அதனால் மறுபடியும் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று எல்லா மாநிலங்களுக்கும் அறிவுரை கிடைத்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் செயல்படும்.
எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதரமற்ற குற்றச்சாட்டு. நான் என்னுடைய வேலையைத்தான் செய்கிறேன். மக்களுக்கு நல்லது நடப்பதற்காக ஆக்கபூர்வமான எந்த கோப்பு வந்தாலும் ஒப்புதல் அளிக்கிறேன். எனவே, உள்துறை அமைச்சர் வருவதை புதுச்சேரிக்கான ஆக்கபூர்வமாக மட்டுமே பார்க்க வேண்டும். வேறு விதத்தில் பார்க்கக் கூடாது. ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சிரிப்புதான் வருகிறது" என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பிரெஞ்சு துணைத் தூதர் லிசே தால்போட் பர்ரே, தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT